» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவர்களை நண்பர்களாகக் கருதும் காலம் வந்துவிட்டது: கனிமொழி எம்.பி

புதன் 10, ஜூலை 2024 4:35:56 PM (IST)



தூத்துக்குடி ஜின் பேக்டரி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, 46 ஆசிரியர்களுக்குக் கையடக்க கணினி வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் ரெஜினா, வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கனிமொழி எம்.பி பேசியது: எதிர்காலத்தின் மீது நம்பிக்கை தரக்கூடிய நிகழ்ச்சியாக இந்த நிகழ்வு இருக்கிறது. இன்றைக்கு மாறிக்கொண்டிருக்கின்ற உலகத்தில் நமது கைப்பேசி, ஒரு கணினியாக மாறிக்கொண்டு இருக்கிறது.  தந்தை பெரியார் அவர்கள் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி வந்த பொழுது, அதை பார்க்க வேண்டும் என்று தள்ளாத வயதிலும் சென்று அந்த கணினியைப் பார்த்தார். 

முதலாவதாக இருந்த கணினி மிகவும் பெரியதாக இருந்தது, பிறகு சிறிதாகி சிறுதாகி தற்போது கைப்பேசி ஒரு கணினியாகத் தான் இருக்கிறது. இந்த மாறுதலை ஆசிரியர்களும் உள்வாங்கிக் கொண்டு மாணவர்களுக்கு அதைச் சொல்லித் தர வேண்டும். நம்மை விட நமது பிள்ளைகள் அடுத்த தலைமுறையைச் சார்ந்தவர்கள், நமக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கூட அவர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். 

இப்போதுள்ள மாணவர்கள் தொழில்நுட்பத்தோடு பிறந்தவர்கள் அவர்களைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு அறிவு சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு தலைமுறையுடன் நாம் பழகிக் கொண்டிருக்கிறோம். மாணவ-மாணவியர் இப்படித்தான் இருக்க வேண்டும், அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்ன காலம் முடிந்துவிட்டது. அனைத்தையும் தாண்டி நாம் அவர்களுடன் நண்பர்களாகப் பழக வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்று பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory