» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வரைப்பட ஒப்புதல் இல்லாமல் தீர்வை பதிவு செய்யப்படாது: நகர் மன்றத் தலைவர் அறிவிப்பு!

வியாழன் 20, ஜூன் 2024 8:00:18 AM (IST)

கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் வரைபட ஒப்புதல் இல்லாமல் கட்டடங்களுக்கு தீர்வை பதிவு செய்யப்படாது என்று நகர் மன்றத் தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

கோவில்பட்டி நகர்மன்ற சாதாரணக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகர்மன்றத் தலைவர் கா. கருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர்.எஸ். ரமேஷ், நகராட்சி ஆணையர் கமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியவுடன் மார்க்சிஸ்ட் உறுப்பினர் கே.சீனிவாசன் பேசியது: அடிப்படை வசதிகளே மேம்படுத்தவேண்டும். தற்போது வர்த்தகம் மற்றும் வியாபாரங்கள், தொழிற்சாலைகள், தொழிலங்களுக்கு உரிமம் வழங்குவதற்கான கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் என்பது அவர்களது தொழிலை பாதிக்கும். எனவே, உரிம கட்டணம் உயர்வு குறித்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்.

அதிமுக உறுப்பினர் கவியரசன்: மன்றத்தில் திமுகவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதிமுக உறுப்பினர்களுக்கு கொடுப்பதில்லை. அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

திமுக உறுப்பினர் ஏஞ்சலா: பசுவந்தனை சாலை 7ஆவது தெருவின் நுழைவாயிலில் போக்குவரத்துக்கு இடையூறாக் உள்ள பாழடைந்த நிலையில் உள்ள தண்ணீர் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதிமுக உறுப்பினர் மணிமாலா: இளையரசனேந்தல் சாலை ரயில்வே சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.

பாஜக உறுப்பினர் விஜயகுமார்: சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

உறுப்பினர்கள் புவனேஸ்வரி, வள்ளியம்மாள், சரோஜா, முத்துலட்சுமி உள்ளிட்டோர் பேசியது: காந்தாரி அம்மன் கோயில் தெருவில் கடந்த 2007இல் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட இடத்தில் மக்கள் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.

அந்தப் பட்டாக்கள் கிராம கணக்கில் இதுவரை பதிவு செய்யப்படாமல் உள்ளது. முத்தானந்தபுரம் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். காட்டுநாயக்கன் தெருவுக்கு லாரி மூலம் வழங்கப்பட்ட குடிநீர் கடந்த 4 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. தனி குடிநீர் திட்டம், சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மேலும், தனி குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகளை சரி செய்து சாலை அமைக்க வேண்டும், என்றனர்.

இதற்கு நகர்மன்றத் தலைவர் பதிலளித்து பேசியது: இங்கு பாராபட்சம் பார்க்காமல் அனைத்து உறுப்பினர்களின் வார்டுகளிலும் பணிகள் நடந்து வருகின்றன. நிதியை பொருத்து அத்தியாவாசிய பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி, அனைத்து பணிகளும் நிறைவேற்றித் தரப்படும். சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இளையரசனேந்தல் சுரங்கப்பாதை அருகே நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்ட உடன் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றியவுடன் அணுகு சாலை அமைக்கப்படும்.

தொழிற்சாலைகள், தொழிலகங்கள் உரிமத்துக்கான கட்டணம் நகர்மன்றம் முடிவு செய்வதில்லை. இங்கு தீர்மானம் மட்டும் தான் நிறைவேற்றப்படுகின்றன. எனவே, இதுதொடர்பாக அனைத்து உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம். மேலும், கட்டட வரைப்பட ஒப்புதல் பெறவில்லையென்றால் கட்டடங்களுக்கு தீர்வை பதிவு செய்யப்படாது. தெருவிளக்குகள் சரி செய்வதற்கான ஒப்பந்தம் புதிய நிறுவனம் எடுத்துள்ளது. விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும், என்றார்.

கூட்டத்தில், நகராட்சி செயற்பொறியாளர் சணல்குமார், நகரமைப்பு அலுவலர் சேது ராஜன், ஆய்வாளர் கிருஷ்ணகுமார், வருவாய் ஆய்வாளர் நாகராஜன், சுகாதார அலுவலர் வெங்கடேசன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கூட்டத்தில் வைக்கப்பட்ட 30 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors


Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory