» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
செவ்வாய் 18, ஜூன் 2024 8:04:58 PM (IST)
கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேம்பார் பஜார் பகுதியில் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்த வேம்பாரைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த காசிலிங்கம் மகன் மகாராஜா (34) என்பவர் கடந்த 2017 வருடம் மார்ச் மாதம் பன்றி இறைச்சியை கடனாக வாங்கியுள்ளார்.
இதுகுறித்து வெற்றிவேல் மகன் செல்வகுமார் (38) என்பவர் கடனாக வாங்கிய பன்றி இறைச்சிக்கான பணத்தை மகாராஜாவிடம் கேட்டு வந்த போது அவர் மறுத்து வந்த நிலையில் செல்வகுமார் மற்றும் அவரது நண்பரான வேம்பார் பகுதியைச் சேர்ந்த அந்தோணி குருஸ் மகன் மரிய செல்வம் (38) ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த 13.04.2017 அன்று மகாராஜாவை கொலை செய்த வழக்கில் சூரங்குடி காவல் நிலைய போலீசார் செல்வகுமார் மற்றும் மரிய செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இவ்வழக்கை அப்போதைய சூரங்குடி காவல் நிலைய ஆய்வாளர் செல்வகுமார் புலன் விசாரணை செய்து கடந்த 21.08.2017 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி உதயவேலன் இன்று (18.06.2024) குற்றவாளிகளான செல்வகுமார் மற்றும் மரிய செல்வம் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சூரங்குடி காவல் நிலைய ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த காவலர் பாலமுருகன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.