» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது!
திங்கள் 20, நவம்பர் 2023 3:50:46 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகளை ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்திபட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 330 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், காதொலிக் கருவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய
17 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்து, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 21 பயனாளிகளுக்கு ரூ.2,83,500/- மதிப்பிலான திறன்பேசிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும், சீன நாட்டின் ஹாங்கோவில் 22.09.2023 முதல் 28.09.2023 வரை நடைபெற்ற நான்காவது ஏசியன் பாரா கேம்ஸ்சில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் அ.குமாரபுரத்தைச் சேர்ந்த இராணுவ வீரரும், மாற்றுத்திறனாளியுமான த.சோலைராஜ் என்பவர் கலந்துகொண்டு தடகள விளையாட்டுப் போட்டிகளில் வு 64 பிரிவில் நீளம் தாண்டுதலில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றதைத்தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, அவர்களை நேரில் சந்தித்து தங்கப்பதக்கத்தினை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
பின்னர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 8 பயனாளிகளுக்கு ரூ.43,832/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும், 3 பயனாளிகளுக்கு ரூ.16,023/- மதிப்பிலான இலவச தேய்ப்புப் பெட்டிகளையும், உலமா மற்றும் பணியாளர் நல வாரியத்தின் மூலம் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த நலவாரிய உறுப்பினர் ஆசியா பிர்தவ்ஸ் என்வரின் மகள் செல்வி.மரியம் என்பவர் சென்ட்ரச் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருவதற்கு ரூ.1,500/- கல்வி உதவித்தொகைக்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, அவர்களிடம் மாற்றுத்திறனாளி செல்லையா என்பவர் காதொலி கருவி வேண்டி மனு அளித்ததைத்தொடர்ந்து மனுவின்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்றுத்திறனாளி பயனாளிக்கு அவருக்கு ரூ.2,960/- மதிப்பிலான நவீன காதொலி கருவியினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.