» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கண்மாயில் மூழ்கி மனவளர்ச்சி குன்றிய பெண் பலி: விளாத்திகுளம் அருகே சோகம்!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 7:49:30 AM (IST)
விளாத்திகுளம் அருகே ஏ.சொக்கலிங்கபுரத்தில் கண்மாய் நீரில் மூழ்கி மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே ஏ. சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி-அங்காள பரமேஸ்வரி தம்பதியினரின் மகள் உமாமகேஸ்வரி (20). பிறவியிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் உமாமகேஸ்வரி பள்ளிக்கு செல்லாமல் பெற்றோருடன் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அங்காள பரமேஸ்வரி தனது மகள் உமா மகேஸ்வரியை வீட்டில் இருக்க சொல்லிவிட்டு துணி துவைப்பதற்காக தங்களது கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு சென்றுள்ளார்.
துணியை துவைத்து விட்டு வீட்டிற்குச் சென்ற அங்காளபரமேஸ்வரி தனது மகள் உமாமகேஸ்வரி வீட்டில் இல்லாததை பார்த்து விட்டு அவரை தேடி கொண்டு மீண்டும் கண்மாய் பகுதிக்கு வந்துள்ளார். ஆனால் உமா மகேஸ்வரி தனது தாய் அங்காள பரமேஸ்வரியை தேடிக் கொண்டு கண்மாய்க்கு பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள ஓடையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அங்காளபரமேஸ்வரி கதறி அழுதுள்ளார் இது குறித்து விளாத்திகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நீரில் மூழ்கி உயிரிழந்த உமாமகேஸ்வரி உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.