» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளுக்கு இலவச இணைப்பு : அமைச்சர் தகவல்
வியாழன் 25, மே 2023 3:05:15 PM (IST)

திருச்செந்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளுக்கு இலவச இணைப்பு வழங்கப்படும் என அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் இன்று (25.05.2023) நடைபெற்ற திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கு மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து தெரிவித்ததாவது: திருச்செந்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு பெற வீட்டுக்கு ரூ.5000 செலுத்த வேண்டும் என்ற நிலையை மாற்றி சுமார் 4000 வீடுகளுக்கு இலவசமாக இணைப்பு வழங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். பாதாள சாக்கடை திட்டத்தில் உணவகங்கள், வணிக வளாகங்களையும் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீடுகளில் இருப்பவர்கள் எவ்வித அச்சமின்றி பாதாள சாக்கடை இணைப்பு பெறுவதற்கு முன்வர வேண்டும். இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் கழிவுநீர் ஆலந்தலை அருகே 85 ஏக்கர் பரப்பில் உள்ள இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நகராட்சி மூலம் ரூ.90 இலட்சம் மதிப்பில் விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் புற்கள் வளர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காய்கறி சந்தையில் 148 கடைகள் கட்டப்பட்டு பணிகள் முடிந்துள்ளது. அதேபோல் மீன், இறைச்சி சந்தைகளுக்கும் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலக கட்டிடம் கட்டுவதற்கும் நடவடிக்கை எடுத்து தற்போது கட்டப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் பரிந்துரையின்பேரில் திருச்செந்தூர் நகரத்தை சுற்றியிருக்கின்ற கால்வாய் மற்றும் ஆவுடையார்குளம் மறுகால் ஓடை சீரமைக்கும் பணிக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். எல்லப்பநாயக்கன்குளம் மறுகால் ஓடையும் சீரமைக்கப்படும். திருச்செந்தூர் புறவழிச்சாலை சாலை அமைப்பதற்கு ஆய்வு பணிகளுக்கு ரூ.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆய்வுப்பணிகள் முடிந்து விரைவில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். திருச்சந்தூர் நகரத்திற்கு 3 பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது. சில இடங்களில் ஆற்று நீர் வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. பொன்னாங்குறிச்சியில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு ரூ.120 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் உடன்குடி, சாத்தான்குளம் மற்றும் திருச்செந்தூரில் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.350 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. நிதியினைப் பெற்று திட்டத்தினை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் தேவையான தூய்மைப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு சுகாதாரம் மேம்படுத்தப்படும். திருச்செந்தூர் வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மூலம் செய்து தரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
முன்னதாக அமைச்சர் திருச்செந்தூர் நகராட்சி காய்கறி சந்தையில் ரூ.3.96 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள காய்கறி கடைகளையும், ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் மற்றும் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருச்செந்தூர் நகராட்சி அலுவலகம் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து ஆவுடையார்குளம் மறுகால் ஓடையினையும் பார்வையிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி, நகராட்சித் தலைவர் சிவஆனந்தி, துணைத் தலைவர் ஏ.பி.ரமேஷ், காவல் துணைக் கண்காணிப்பாளர் வசந்தராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாரியப்பன், வட்டாட்சியர் வாமணன், நகராட்சி ஆணையர் வேலவன், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள் ராமசாமி, லதா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம், குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
ஜெயந்திநாதன் காங்கிரஸ் திருச்செந்தூர்மே 25, 2023 - 07:33:55 PM | Posted IP 172.7*****
பொதுமக்கள்,இடதுசாரிசர்வகட்சிகள மற்றும் பொதுநலசமூக அமைப்புகள் ஏனையோர்களின் பல்லாண்டு கால கோரிக்கையை அமலாக்கம் செய்து நடைமுறைபடுத்திய முன்னோடி தமிழ்நாடு முதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர்,தொகுதி அமைச்சர் அனைவர்க்கும் மக்களின் மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துக்கள்.
மேலும் தொடரும் செய்திகள்

கடலோர கிராம பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்!!
செவ்வாய் 30, மே 2023 9:08:02 PM (IST)

வட மாநிலதொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
செவ்வாய் 30, மே 2023 9:01:40 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா
செவ்வாய் 30, மே 2023 7:59:19 PM (IST)

வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 30, மே 2023 7:46:16 PM (IST)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!
செவ்வாய் 30, மே 2023 5:36:50 PM (IST)

மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 30, மே 2023 4:27:42 PM (IST)

இனிமே 26, 2023 - 07:47:03 AM | Posted IP 162.1*****