» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்களை தொழில்முனைவோராக மாற்றுவதே முதல்வரின் உன்னத நோக்கம் - அமைச்சர் பேச்சு

சனி 25, மார்ச் 2023 4:00:18 PM (IST)



பெண்களை தொழில்முனைவோராக மாற்றுவதுதான் தமிழ்நாடு முதலமைச்சரின் உன்னத நோக்கம் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் பேசினார். 

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு கிராமத்தில் பெண்கள் வாழை நாரில் இருந்து இயந்திரம் மூலம் பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியினை சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் இன்று துவக்கி வைத்து தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியை சேர்ந்த பெண்களுக்கு நாமக்கல் மாவட்டத்ததை சேர்ந்த குழுவினர் மூலம் வாழைநாரில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

இதில் 60 பேருக்கு 2 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. வாழைநாரில் இருந்து மிதியடி, டேபிள் மேட், வாளி உள்ளிட்ட பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. குலையன்கரிசல், கூட்டாம்புளி, அத்திமரப்பட்டி ஆகிய பகுதியில் வாழைத்தார் அதிக அளவில் எளிதாக கிடைக்கும். வாழைத்தாரில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும்போது, கழிவுப்பொருட்களாக கிடைக்கும் பட்டை, நீர் போன்றவை உரமாகவும், பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தலாம்.

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், நமது மாவட்டத்தை சேர்ந்த பெண்களுக்கு ஆகாயத் தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இதன்மூலம் தற்போது ஆகாயத் தாமரையில் செய்யப்பட்ட பொருட்கள் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. பெண்களை தொழில்முனைவோராக மாற்றுவதுதான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உன்னத நோக்கம் ஆகும். மகளிர் கடன், கூட்டுறவுக்கடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, புதிய மகளிர் குழுக்கள் உருவாக்கம், குழுவினருக்கு பயிற்சி ஆகியவை அளிக்கப்படுகிறது. 

பயிற்சிக்கு பின் தொழில்முனைவோராக உருவாக்கும் நிலையை தமிழ்நாடு முதலமைச்சர் உருவாக்கி தந்துள்ளார். மகளிர் மேம்பாட்டு திட்டம் மூலம் நடைபெறும் பயிற்சிக்கு தேவையான இயந்திரங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் பயிற்சிக்கு பின் மாவட்ட தொழில் மையம் மூலம் மகளிர்கள் சுயமாக தொழில் செய்ய ஏற்பாடு செய்யப்படும். இன்று நடைபெறும் பயிற்சியில் பெண்கள் நன்றாக கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் பயிற்சியாக இது அமையும். பயிற்சியில் பெண்கள் நன்றாக கற்றுக்கொண்டால் மூலம் மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்ததாவது: முள்ளக்காடு பகுதியில் உள்ள பெண்களுக்கு வாழைநாரில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி பட்டறை இன்று நடத்தப்படுகிறது. சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் , மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு நகரின் மையப்பகுதியில் விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். மாவட்ட நிர்வாகம் மற்றும் மகளிர் திட்டம் மூலம் விற்பனைக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முள்ளக்காடு பகுதியில் வாழை விவசாயம் அதிகளவு நடைபெறுகிறது. எனவே வாழைத்தாரை எடுத்த பிறகு பட்டை உள்ளிட்ட பொருட்களை வீணாக்காமல் மதிப்பு கூட்டப்பட பொருட்கள் தயாரிக்க வேண்டும்.

சென்னை, பெங்க@ர் போன்ற பகுதிகளில் இயற்கை சார்ந்த பொருட்களை மக்கள் அதிகளவில் விரும்புகிறார்கள். வாழைநாரில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும்போது அதிக விலை கிடைக்கும். இதனால் வாழ்வாதாரம் உயரும். முள்ளக்காடு ஊராட்சியில் இருக்கும் அனைத்து பெண்களும் பயிற்சி பெற்று பொருட்கள் தயாரிக்க வேண்டும். உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இணையதளம் மூலமாகவும் சந்தைப்படுத்தலாம். முள்ளக்காடு ஊராட்சியை நமது மாவட்டமே திரும்பிப்பார்க்கும் வகையில் சிறப்பாக பயிற்சி பெற்று பொருட்கள் தயாரிக்க வேண்டும். உங்களின் செயல்பாட்டினைப் பொருத்துதான் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளுக்கும் இந்த பயிற்சியினை விரிவுப்படுத்த முடியும். பெண்கள் இந்த வாய்ப்பினை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன், மாவட்ட தொழில் மையம் மேலாளர் ஸ்வர்ணலதா, தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், முள்ளக்காடு ஊராட்சி மன்றத்தலைவர் கோபிநாத் மற்றும் அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர்; கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory