» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பைக் பேரணி: ஆட்சியர், மேயர் பங்கேற்பு!

செவ்வாய் 6, டிசம்பர் 2022 4:16:45 PM (IST)


தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பைக் பேரணியில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர். 

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வட்டார போக்குவரத்து துறை சார்பாக நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் குறும்பட வெளியீட்டு விழாவில் இன்று (06.12.2022) மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில் ராஜ் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில், மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில் ராஜ் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சாலைகளில் ஏற்படும் மரணங்களை குறைப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறோம். காவல்துறை, வருவாய் துறை, உள்ளாட்சி அமைப்புகள், போக்குவரத்து துறை ஆகிய துறைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொரு மாதமும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு கரு பொருளை மையமாகக் கொண்டு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. 

அதுபோல், இந்த மாதம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாநகராட்சி மேயர் உடன் நானும் சேர்ந்து இரண்டு சக்கர வாகனம் ஓட்டி ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இந்த விழிப்புணர்வு பேரணியானது ஏ.ஆர் கேம்பில் இருந்து, முத்துநகர் கடற்கரை வரை சென்றடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சுப்பையா வித்யாலயம் பள்ளி சிறார்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு குறும்படம் வெளியிட உள்ளோம். இந்த குறும்படத்திற்கு குட்டி காவலர் என்ற பெயரிடப்பட்டுள்ளது. இது முழுக்க, முழுக்க சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு குறும்படம். 

பள்ளி குழந்தைகளிடம் ஆரம்ப கட்டத்தில் இருந்தே, சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினால் ஒரு நல்ல சமுதாயம் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும். ஒவ்வொரு பள்ளிகளிலும் சாலை பாதுகாப்பு குழு என்ற ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்கள் மூலமாக சாலை பாதுகாப்பு விஷயங்கள் அனைத்தையும் சொல்லிக் கொடுக்கிறோம். இன்றைய தினமும் நாம் சாலை பாதுகாப்பு குழு மூலமாக, அனைத்து பள்ளிகளிலும் குட்டி காவலன் என்கின்ற குறும்படத்தினையும் அதுபோல, போக்குவரத்து சிக்னல்களை எவ்வாறு நாம் கடைப்பிடித்து செல்ல வேண்டும் என்பதனை கொண்டு செல்லும் விதமாக இன்று நாம் ஆரம்பித்துள்ளோம். 

தூத்துக்குடி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 350 இலிருந்து 390 இறப்புகள் சாலை விபத்துகளால் கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஒரு வருடத்திற்கு சராசரியாக 14 ஆயிரத்திலிருந்து, பதினைந்தாயிரம் இறப்புகள் சாலையில் நடைபெறும் விபத்துகளால் ஏற்பட்டு வருகிறது. கண்டிப்பாக இவை அனைத்தும் தடுக்கக்கூடிய எண்ணிக்கை தான். அனைத்து துறைகளும் சேர்ந்து செயல்பட்டால் இந்த எண்ணிக்கையினை குறைக்க முடியும். 

இந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, ஒவ்வொரு மாதமும் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறை, நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து அனைத்து சாலைகளும், சாலை விபத்து இல்லாத சாலைகளாக மாற்றுவதற்கும், எல்லா சிக்னல்களையும் சரி செய்வதற்கும், கூட்டங்களில் முடிவெடுக்கப்பட்டு எந்தெந்த சாலைகள் பலதடைந்துள்ளதோ, அதை சரி செய்யும் பணிகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அதேபோல், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வுகள் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொழுது சாலைகளினால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையினை நம் அனைவராலும் கணிசமாக குறைக்க முடியும் என தெரிவித்தார்.



முன்னதாக மில்லர்புரம் A.R கேம்ப்பிலிருந்து, முத்துநகர் கடற்கரை வரை ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியில், மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில் ராஜ் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் , தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு, மோட்டார் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சிகளில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சி.விநாயகம் (தூத்துக்குடி), கு.நெடுஞ்செழிய பாண்டியன் (கோவில்பட்டி), மாவட்ட கல்வி அலுவலர் த.தமிழ்செல்வி, தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு குறும்படம் தயாரித்த குழுவினர், சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

மக்கள்Dec 6, 2022 - 05:22:46 PM | Posted IP 162.1*****

ஹெல்மெட் அணிவது மக்களின் விருப்பம்.

MauroofDec 6, 2022 - 04:49:55 PM | Posted IP 162.1*****

விதிகளின் பிரகாரம் முறையாக மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் தரமாக சாலைகள் அமைத்து அதில் போக்குவரத்து விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தொடர்பான அறிவிப்புகளை இடம்பெறச் செய்து அதன் பிறகு "சாலை பாதுகாப்பு" விழிப்புணர்வு பேரணிகள் நடத்தினால் சிறப்பிற்குரியதாக இருக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory