» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும் : வணிகர்கள் கோரிக்கை!

செவ்வாய் 29, நவம்பர் 2022 12:20:41 PM (IST)



டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை நடைமுறைபடுத்த 6 மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என வணிகவரித்துறைக்கு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் சோலையப்ப ராஜா, மாவட்ட செயலாளர் மகேஷ்வரன், மாவட்ட பொருளாளர் ஆனந்த பொன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் வணிகவரித்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில்: வணிகவரித் துறையினால் கடந்த மார்ச் மாதத்தில் சில்லரைக் கடைகளில் ஆய்வு செய்வது சம்பந்தமாகவும், டெஸ்ட் பர்ச்சேஸ் செய்வது சம்பந்தமாகவும் அறிவிப்புகள் வெளியானபோதே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக அனைத்து வணிகர்களின் சார்பாக, தனது கருத்துக்களையும், எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தது. 

மீண்டும் டெஸ்ட் பர்ச்சேஸ் சம்பந்தமான வணிகவரித் துறையின் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் வணிகவரித் துறை அதிகாரிகள் சில்லரை வணிகம் செய்யும் வணிகர்களிடம் பொருட்கள் வாங்கி அதை டெஸ்ட் பர்ச்சேஸ் என குறிப்பிட்டு அதற்கு அபராதமாக ரூ.20,000 வரை வசூலிப்பதாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மாவட்டத்திற்கு புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.

அனைத்து சில்லரைக் கடைக்காரர்களும் தாங்கள் பொருட்களை வாங்கும்போது, அதற்கான வரி செலுத்தியே பொருட்களை வாங்கி வந்து, அதை பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அப்பொருட்கள் ஏற்கனவே வரி விதிவிதிப்புக்கு உட்பட்டது. ஆனாலும் வணிக வரித்துறை அதிகாரிகள், சில்லரை கடைகளில் டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில், பொருட்களை வாங்கி, அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை என்று கூறி அபராதம் விதிக்கும் முறை ஏற்புடையது அல்ல. 

இது சில்லரை வணிகத்தை கேள்விக்குறியாக்கும் செயலாகும். வரி ஏய்ப்பு செய்கிறவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கருத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எதிரானது அல்ல. குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து, கனரக வாகனங்கள், துறைமுக கண்டெய்னர்கள் மூலம் கொண்டுவரப்படும் நிலையில் அவற்றையும், அவற்றை கொண்டு வருகின்ற நிறுவனங்களையும், ஆய்வு செய்தால் மட்டுமே வரி ஏய்ப்பு முழுமையாக தடுக்கப்படும். 

எனவே, வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்ற உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், கனரக வாகன உரிமையாளர்கள் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, வரி ஏய்ப்பை முழுமையாக தடுத்திட ஆவன செய்திட வேண்டும். அதற்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு துணை நிற்கும் என்பதை உறுதி செய்து, சில்லரை சிறு. குறு வணிகர்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை அமைந்திட பேரமைப்பு வலியுறுத்துகின்றது.

எனவே, 6 மாதங்கள் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை நிறுத்திவைத்து, வணிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன்பிறகே படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory