» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எச்.சி.எல். நிறுவனத்தின் சமுதாய் திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் : கனிமொழி எம்பி பேச்சு

புதன் 23, நவம்பர் 2022 11:51:22 AM (IST)



எச்.சி.எல். நிறுவனத்தின் சமுதாய் திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்தி எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்கக்கூடிய கிராமமாக உருவாக்கி காட்ட வேண்டும் என கனிமொழி எம்பி தெரிவித்தார்.

தூத்துக்குடி எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் எச்.சி.எல். நிறுவனத்தின் சமுதாய் திட்ட செயலாக்கத்தின் மூலம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் புதூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் முன்னிலையில் இன்று  நடைபெற்றது.

கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்ததாவது: விளாத்திகுளம் ஒன்றியம் மற்றும் புதூர் ஒன்றியத்தில் சமுதாய் திட்டத்தில் பணிகளை செயல்படுத்தும் எச்.சி.எல். நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதுபோல, எச்.சி.எல். நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ்நாடார் தான் பிறந்த தூத்துக்குடி மாவட்டத்திற்கு நன்றிக்கடனாக இந்த திட்டத்தினை முன்னெடுத்திருக்கிறார்கள். அரசு என்பது எல்லா மக்களுக்கும் விரிவான அளவில் திட்டங்களை செயல்படுத்தும். 

ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மக்களை சந்தித்து அவர்களின் தேவையை அறியும் வாய்ப்பு அரசுக்கு கிடைப்பதில்லை. ஆனால் மக்களுக்கு தேவையான அரசின் திட்டங்களை எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பது ஊராட்சி பிரதிநிதிகளுக்கு தெரியும். மக்களுக்கு தேவையானவற்றை செய்வதற்கு ஆர்வம் இருந்தாலும் சில நேரங்களில் அவற்றை எவ்வாறு செய்வது என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அதற்கு உதவக்கூடிய வகையில் இந்த சமுதாய் திட்டம் இருக்கும். மேலும் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கு எந்த வேலைக்கு செல்லலாம் என்பதற்கும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். நாம் செய்யும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை புதிய அணுகுமுறையுடன் செய்யும்போது இலாபகரமாக மாற்ற முடியும்.

கால நிலை மாற்றத்தால் நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களும் பாதிக்கக்கூடிய நிலை இருக்கிறது. இதை நாம் எதிர்கொள்ள தயார் செய்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். நமது கிராமத்திற்கு என்ன தேவை என்பதை தெரிந்துகொண்டு அதை நிறைவேற்றி தன்னிறைவு கிராமமாக மாற்றுவதுதான் சமுதாய் திட்டம். இந்த திட்டத்தினை நாம் சரியாக பயன்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டினால் தமிழகம் முழுவதும் செயல்படுத்தக்கூடிய திட்டமாக நிச்சயமாக மாற்ற முடியும். 

எச்.சி.எல். நிறுவனத்திடம் கிராமத்தில் சூரியசக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் திட்டத்தினை செயல்படுத்துமாறு வைத்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். நாம் அத்தனை பேரும் இணைந்து ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர்தான் இந்த திட்டம். இந்த திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்தி எல்லோருக்கும் பயன்தரக்கூடிய வகையில், மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் நம்முடைய கிராமத்தை எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்கக்கூடிய கிராமமாக உருவாக்கி காட்ட வேண்டும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, விளாத்திகுளம் ஒன்றியம் மற்றும் புதூர் ஒன்றியத்தில் சமுதாய் திட்டத்தை செயல்படுத்துவதற்காக எச்.சி.எல். நிறுவனத்தின் மூலம் பூர்வாங்க பணிகள் நடைபெறுகிறது. கடந்த காலத்தில் ஊராட்சி தலைவர்கள் கிராமங்களில் தெருக்கள் மற்றும் நீர் நிலைகளை சுத்தமாக பராமரிப்பார்கள். வீடுகளில் இருந்து கழிவு நீர் வெளியே வராது. 

ஆனால் இன்றைக்கு கிராமங்களிலும் கழிவுநீர் வடிகால்கள் தேவைப்படுகிறது. மேலும் கழிவுநீர் விவசாயத்திற்கு பயன்படும் குளங்களில் கலக்கின்றது. எனவே ஊராட்சி தலைவர்கள் திட்டமிட்டு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். கிராமங்களிலும் மழைநீர் தேங்காதவாறு வடிகால்கள் அமைப்பது, சாலை வசதி உள்ளிட்ட பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். நீர் நிலைகளுக்கு வரும் வரத்து கால்வாய்கள் மற்றும் குளங்கள் தூர்வாரப்பட வேண்டும்.

இத்திட்டத்தின்கீழ், இப்பகுதியில் உள்ள குழந்தைகள், பெண்களின் உடல் நலனை மேம்படுத்துவதற்கும், அங்கன்வாடி மையங்களில் தேவைப்படும் கட்டிடங்களை கட்டி தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மேலும் மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள் ஆகியோரை கணக்கெடுப்பது மட்டுமல்லாமல் அந்த விவரங்களை எங்களுக்கும் தர வேண்டும். வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு பயிற்சிகள் அளிக்க வேண்டும். ஏனென்றால் விளாத்திகுளம் பகுதியில் உள்ள கன்னி ஆடுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. தமிழகத்தில் வேறெங்கும் வளர்க்கப்படுவதில்லை. உங்களது முயற்சிக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம். அனைத்து பிரதிநிதிகளும் கிராமங்களுக்கு தேவையானவற்றை தெரிவித்து இத்திட்டத்தில் பயனடைய வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  தெரிவித்ததாவது: எச்.சி.எல். சமுதாய் திட்டமானது கிராமத்துக்கு பயன்தரக்கூடிய திட்டம். அனைத்து துறைகளும் சேர்ந்து செயலாற்றக்கூடியது. இந்த திட்டத்தில் மக்களும் பங்குபெற்றால்தான் தன்னிறைவான கிராமத்தை உருவாக்க முடியும். விளாத்திகுளம் ஒன்றியம் மற்றும் புதூர் ஒன்றியத்தில் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினால் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யலாம். அரசின் ஒவ்வொரு துறையில் உள்ள திட்டங்களையும் ஊரக பகுதிகளில் செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். 

அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு கிராமத்தை முன்னேற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினை பயன்படுத்தி கிராமத்தை மட்டுமல்லாமல் மக்களையும் சமுதாயத்தில் முன்னேற்றி இன்னும் 5 வருடத்திற்குள் மற்ற மாநிலங்களும் விளாத்திகுளம் ஒன்றியம் மற்றும் புதூர் ஒன்றியத்தை முன்னுதாரணமாக கூறும் அளவுக்கு வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம்,  (ஓய்வு), தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory