» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை

வியாழன் 27, அக்டோபர் 2022 7:44:46 AM (IST)விடிய விடிய பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வருகிற 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனினும் கடந்த சில நாட்களாகவே தூத்துக்குடி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நள்ளிரவு கனமழையாக பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. 

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் ஆங்காங்கே தேங்கி கிடந்த தண்ணீரை மாநகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலம் உறிஞ்சி அகற்றினர். தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையம் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. அதில் பயணிகள் சிரமப்பட்டு சென்றனர். மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கடம்பூரில் 53 மில்லி மீட்டரும், தூத்துக்குடியில் 31 மில்லிமீட்டரும், கழுகு மலையில் 24 மில்லிமீட்டரும் காயல்பட்டினம், கயத்தாறில் 15 மில்லிமீட்டரும் மழை பதிவானது. 

இதேபோல் குலசேகரன்பட்டினம், கீழ அரசரடி, கோவில்பட்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதற்கிடையே இன்று காலையும் லேசான மழை பெய்தது. இதைத்தொடர்ந்து மாணவர்களின் நலன்கருதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோருக்கு வேண்டுகோள்: 

தொடர் மழை காரணமாக பல்வேறு குளம் குட்டைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தங்களது குழந்தைகளை மழையில் நனைய அனுமதிக்காதீர்கள். குழந்தைகளை வீட்டைவிட்டு வெளியில் அனுப்பாதீர்கள். குழந்தைகள் அவர்களது நண்பர்களோடு சேர்ந்து குளம் குட்டைகளில் குளிக்க அனுப்பாதீர்கள். மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள தண்ணீர் தேங்கிய குளம் குட்டைகளில் குளிக்க வேண்டாம் என்ற அறிவிப்பு பலகையினை வைக்க உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory