» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போக்குவரத்திற்கும் இடைஞ்சல் ஏற்படுத்த கூடாது: தசரா குழுக்களுக்கு எஸ்பி எச்சரிக்கை!

புதன் 28, செப்டம்பர் 2022 11:30:57 AM (IST)

தசரா பக்தர்கள் முக்கிய சந்திப்புகளில் நன்கொடை பெறவோ, இசைகருவிகளை இசைத்துக் கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடைஞ்சல் ஏற்படுத்த கூடாது என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு நடைபெறும் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 26.09.2022 முதல் 05.10.2022 வரை நடைபெற்று வருகிறது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி தசரா திருவிழாவின்போது ஊருக்கு உள்ளே, வெளியே எந்த ஒரு பகுதியிலும்  ஆபாச நடனங்கள் ஆடுவதற்கும், ஆபாசப்பாடல்கள், சினிமா பாடல்கள் இசைப்பதற்கும்,  தகாத வார்த்தைகள் உபயோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளை நடத்த உரிய அனுமதி பெற்று அதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குலசை மற்றும் உடன்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில்  ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களுடன் தற்காலிக காவல் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கண்காணித்தும், திறந்தவாகனங்களில் அசாதாரண சூழலில் ஆட்களை/பக்தர்களை ஏற்றி வந்தால் அந்த வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேல், சூலாயுதம், வாள் போன்று உலோகத்தாலான எந்தப் பொருட்களையும் கொண்டு வருவதோ, ஜாதி சின்னங்களுடன் கூடிய உடைகளோ, தொப்பி, கொடிகள், ரிப்பன்கள் ஆகியவை அணிந்துவரவோ, காவல் துறையினரை போன்று சீருடை அணிந்து வேடமிட்டு வரவோ, அதிக சத்தத்துடன் டிரம் அடித்து ஒலி எழுப்பி சுற்றுச் சூழலுக்கு பங்கம் ஏற்படுத்தினாலோ, ஜாதி சம்பந்தமான கோஷங்கள் மற்றும் சைகைகள் ஏற்படுத்தவோ அனுமதி இல்லை.

கோவில் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள், கடற்கரை, வாகன நிறுத்தங்கள், சாலை சந்திப்புகள் ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவைகளின் மூலம் பக்தர்கள் வடிவில் வரும் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் பார்வையிட்டு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பாதுகாப்பு மற்றும் திருட்டு நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டுவர கடற்கரை வாகன நிறுத்தங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுவதுடன் மக்கள் வாகனங்களில் இருந்து இறங்கி குழுக்களாக கடற்கரை சென்று கோவில் வந்து திரும்பி அவரவர் வாகனங்களில் செல்லும் இடம் வரை காவலர்கள் அவர்களை கண்காணிக்கும் விதமாக சீருடை மற்றும் சாதாரண உடைகள் அணிந்த ஆண், பெண் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அல்லது இதர சிறு வியாபாரிகள் உரிய அனுமதியின்றி சாலை ஓரம்  சட்டவிரோத கடைகள் அமைத்தோ, வேறுவிதமாகவோ போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக வாகன நெரிசலை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்.

காவல்துறை முன் அனுமதியின்றி திருவிழா சம்மந்தமாக கோவில் பகுதிகள் மற்றும் எந்த தனியார் அல்லது பொது இடத்திலும் ஒலிபெருக்கி பயன்படுத்தவோ ஆடல், பாடல் போன்ற இசைநிகழ்ச்சிகளோ, எந்த விதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தவோ,  இராட்டிணங்கள் அமைத்து தொழில் செய்யவோ, யாருக்கும் அனுமதியில்லை.

பக்தர்களை ஏற்றிவரும் தனியார் வாகன ஓட்டிகள் தற்காலிக வாகன நிறுத்தத்தில் ஏனோதானோ என்று வாகனங்களை நிறுத்தாமலும், வாகனங்களை சுற்றி கொட்டகை அமைக்காமலும் ஒழுங்காக நிறுத்தி மற்ற வாகனங்கள் வந்து செல்ல இடமளித்து நிறுத்தவேண்டும். காவல்துறை உத்தரவுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

பக்தர்கள் தசரா குழுக்களாக வந்து முக்கிய சந்திப்புகளை கடக்கும் போது அவ்விடத்தில் அதிக நேரத்தில் நிறுத்திக் கொண்டு வான வேடிக்கைகள் நடத்தவோ, நன்கொடை பெறவோ, இசைகருவிகளை இசைத்துக் கொண்டோ மற்ற பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடைஞ்சல் ஏற்படுத்த கூடாது.
 
மேற்படி விதிமுறைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல்துறையால் அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலை மற்றும் நியாயமான தேவைகளுக்காகவும் பக்தர்களின் பொதுநலனுக்காகவும் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பக்தர்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து

makkalSep 28, 2022 - 08:15:16 PM | Posted IP 162.1*****

மாவட்ட கண்காணிப்பாளரின் அறிக்கை வரவேற்கத்தக்கது , பேய் மாதிரி பலவித வேடமிட்டு திரிகிறவர்களை காவல்துறை கண்காணிக்க வேண்டும் , குழந்தைகள பயந்து விடுவார்கள் , கண்ட இடங்களிலும் ஒலி பெருக்கி பயன்படுத்துவை தடை செய்வது பொது மக்களுக்கு நல்லதே ;

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory