» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திங்கள் 26, செப்டம்பர் 2022 10:20:29 AM (IST)குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத்  தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.  விழாவை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிபட்டம் வைத்து கொடிஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. 

கொடிபட்டம் கோவிலுக்கு வந்ததும், காலை 9 மணிக்கு கோவில் முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜையும் தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. கோவில் கொடி ஏறியதும், விரதமிருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிலில் காப்பு வாங்கி தங்களது வலது கையில் கட்டினர். சிலர் பூசாரி கையினாலும் காப்பு கட்டினர்.

மதியம் முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் செவ்வாடை அணிந்து கோவிலில் குவிந்துள்ளனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள், தாங்கள் விரதம் இருக்கும் தசராபிறையில் தெளிப்பதற்காக புனிதநீரை எடுத்து கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக கொடியேற்றம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் கட்டுப்பாடுகளுடன் நடந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தொற்று பரவல் நீங்கியதையடுத்து தசரா திருவிழாவில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதனால் தசரா திருவிழா கோலகலத்துடன் தொடங்கி உள்ளது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory