» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவில் நாழிக்கிணற்றில் நீராட, வள்ளி குகை தரிசனத்துக்கான கட்டணம் ரத்து: நாளை முதல் அமல்!

வியாழன் 7, ஜூலை 2022 12:57:04 PM (IST)திருச்செந்தூர் கோவில் நாழிக்கிணற்றில் நீராட மற்றும் வள்ளி குகை தரிசனத்துக்கான கட்டணம் நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் மூத்தகுடி மக்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவருமே நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வது மிகவும் கடினமாக இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு வந்தது. 

இதைத் தொடர்ந்து அவரது அறிவுரையின்படி அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோவிலில் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். மேற்கண்ட ஆய்விற்குப் பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் நாழிக்கிணற்றில் புனித நீராடுவதற்கும், வள்ளிக்குகையில் தரிசனம் புரிவதற்கும் அனுமதி கட்டணம் வசூல் செய்யப்படுவதை ரத்து செய்து பக்தர்கள் நலன் கருதி கட்டணமின்றி புனித நீராடும் வசதி செயல்படுத்தப்பட உள்ளது.

மூத்த குடிமக்கள் தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கும் பொருட்டு மூத்த குடிமக்கள் நலன் கருதி சண்முகவிலாசம் மண்டபம் பகுதியில் தனிவரிசை ஏற்படுத்தி கட்டணமின்றி விரைவாக தரிசனம் செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவர்கள் வயதினை அடையாளம் காட்டும் வகையில் அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை இதில் ஏதாவது ஒரு அடையாள அட்டை அசலினை கோவிலில் இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கவுண்டரில் காண்பித்து உதவிக்கு ஒருவர் மட்டும் அனுமதிக்கப்பட்டு விரைவு தரிசனம் செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி சக்கர நாற்காலி வசதி தகவல் மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் வடக்கு வாசல் வழியாக மாற்றுத்திறனாளிகளுக்கென்று அமைக்கப்பட்டுள்ள மரப்பலகையிலான ரேம்ப் வழியாக பக்தர்கள் வெளியேறும் வழியில் சண்முகர் சன்னதி வழியாகச் சென்று நேரடியாக கட்டணமின்றி மூலவரைத் தரிசனம் செய்யும் வசதி செயல்படுத்தப்பட உள்ளது. இவை அனைத்தும் நாளை (8-ந்தேதி) முதல் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து

முரளிJul 7, 2022 - 06:15:59 PM | Posted IP 162.1*****

அருமை...

முருகன் அடிமைJul 7, 2022 - 02:29:59 PM | Posted IP 162.1*****

திருச்செந்தூர் முருகருக்கு அரோகரா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital

Thoothukudi Business Directory