» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்கு வரப்பிரசாதம் : தூத்துக்குடி விழாவில் ஆளுநர் பேச்சு

சனி 18, ஜூன் 2022 3:16:19 PM (IST)



அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்கு வரப்பிரசாதம். உலகத்திற்கே இந்தியா வழிகாட்டியாக அமையும் என தூத்துக்குடியில் நடைபெற்ற வஉசி பிறந்த நாள் விழாவில் ஆளுநர் பேசினார். 

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடிக்கு வந்தார். அவரை, விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில் ராஜ், காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் மற்றும் அரசு உயா் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் ஆளுநர் கார் மூலம் தூத்துக்குடி அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்றார். 

பின்னர் தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு சென்ற ஆளுநர் அங்கு நடைபெற்ற வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று வ.உ.சி. குறித்த புத்தகத்தை ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:  வசதியுடன் வாழும் வாய்ப்பு இருந்தும் வ.உ.சி. சாதாரண எளிய வாழ்க்கையை வாழ்ந்தார். மக்களுக்காகவே வாழ்ந்து தனது சொத்துக்களை இழந்தார். இவர் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளாலேயே நாடு சுதந்திரம் பெற்று உள்ளது. நாடு வளர்ச்சி அடைய இந்தியாவின் நான்கு தூண்களும் ஒன்றாக வளர வேண்டும். 

வ.உ.சி. போன்றவர்களின் வரலாற்றை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டும். தேவையற்ற வரலாறுகளை சொல்வதை தவிர்க்க வேண்டும். சனாதன தர்மத்தின் மூலமாகவே இந்தியாவின் வளர்ச்சி அமையும். சனாதன தர்மத்தின் மூலமாகவே பாரதம் கட்டமைக்கப்பட வேண்டும். இந்த தேசம் எழுச்சி பெற்று வருகிறது. நாடு தன்னுடைய சுய பலத்தை தற்போது உணர்ந்து உள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக இளம் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இளைஞர்களால் தான் நாட்டின் வளர்ச்சி உள்ளது. அரசால் மட்டும் நாட்டின் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது. ஒரே பாரதம், உன்னத பாரதம், தற்சார்பு பாரதம் என்பது நமது முழக்கமாக இருக்க வேண்டும். அரசின் ஒவ்வொரு நல்ல திட்டங்களும், நடவடிக்கைகளும் சிலரால் தவறாக கொண்டு செல்லப்படுகிறது. இளைஞர்களுக்காக வெளிப்படை தன்மையுடன் கொண்டு வரப்பட்ட ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் 'அக்னிபத்' திட்டம் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாகும்.

ஆனால், இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது புரட்சிகரமான திட்டம் ஆகும். 4 ஆண்டுகளில் இளைஞர்கள் அவர்களின் நிலையை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றும். இளைஞர்களுக்கு 'அக்னி பத்' திட்டம் தன்னம்பிக்கையையும், சுய ஒழுக்கத்தையும் மேம்படுத்தும். இதன் மூலம் அவர்கள் ஒழுக்கம் மிக்கவர்களாக மாறுவர்.

இந்த திட்டத்தில் பணியாற்றி வெளியே வருபவர்களுக்கு அரசிலும், தனியார் துறையிலும் வேலை வாய்ப்பு முன்னுரிமை கிடைக்கும். இளைஞர்களின் உழைப்பால் 2047-ம் ஆண்டில் இந்தியா உலகத்திற்கே வழிகாட்டியாக மாறும். நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் உதவ வேண்டும். அதை விடுத்து தவறான வழியில் செல்லக் கூடாது. இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலர் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களின் சதித்திட்டத்தை அனைவரும் இணைந்து முறியடிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.


விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழ்களை ஆளுநர் வழங்கினார். விழாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற சோகோ கார்ப்பரேஷன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தஞ்சை ராமகிருஷ்ணா மடத்தலைவர் சுவாமி விமூர்தானந்தா, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர துணைத்தலைவர் நிவேதிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விவேகானந்த கேந்திரா தூத்துக்குடி கிளை பொறுப்பாளர் முத்துக்குமார் வரவேற்றார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகையையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory