» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புதிய ரயில் பாதை திட்டம்: 120 கிமீ வேகத்தில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்!

புதன் 12, ஜனவரி 2022 8:54:52 PM (IST)தூத்துக்குடி மீளவிட்டான் முதல் மேலமருதூர் வரையிலான 18 கிலோ மீட்டர் தூர புதிய ரயில் பாதையில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த 1999-2000ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய வழித்தடத்தில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் ரயில்வே போர்டுக்கு ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி, மீளவிட்டான், மேலமருதூர், குளத்தூர், விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர், பந்தல்குடி, அருப்புக்கோட்டை, கல்குறிச்சி, காரியாப்பட்டி, ஆவியூர், பாறைப்பட்டி, திருப்பரங்குன்றம் வழியாக மதுரை வரை 135 கிலோ மீட்டர் தூரம் ரயில் பாதை அமைக்கப்படுகிறது.

இந்த புதிய ரயில் பாதை திட்டம் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய 3 மாவட்டங்களிலும் மொத்தம் ரூ.2 ஆயிரத்து 175 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக 800 எக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 400 எக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில் மீளவிட்டான் முதல் மேலமருதூர் வரையிலான 90 எக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மீதம் உள்ள நிலங்கள் கையகப்படுத்தும் பணி, கள ஆய்வுகள் முடிக்கப்பட்டு அறிக்கை சென்னைக்கு அனுப்பி பல்வேறு நிலைகளில் நடந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து மேலமருதூர் வரை 18 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.260 கோடி செலவில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் பாதையில் 4 வழிச்சாலையில் மேம்பாலம் உள்பட பல்வேறு பாலங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ரயில் பாதையில் நேற்று ரயில் என்ஜினை 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனால் ரயில் பாதை அருகே பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து தெற்கு ரயில்வே துணை தலைமை பொறியாளர் (கட்டுமானம்) நந்தகோபால் தலைமையிலான அதிகாரிகள் முன்னிலையில் சோதனை ஓட்டம் தொடங்கியது. காலை 11.05 மணிக்கு தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து புறப்பட்ட ரயில் என்ஜின் 8½ நிமிடங்களில் மேலமருதூரை சென்றடைந்தது. அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு 8½ நிமிடங்களில் மீளவிட்டானை வந்தடைந்தது. இந்த சோதனை ஓட்டம் 12 மணிக்கு முடிவடைந்தது.
வெற்றி

இதுகுறித்து துணை தலைமை பொறியாளர் (கட்டுமானம்) நந்தகோபால் கூறியதாவது: தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம், அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில் முதல்கட்டமாக தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து மேலமருதூர் வரை 18 கிலோ மீட்டர் தூர ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து உள்ளன. இந்த பாதையில் ரயில் என்ஜினை 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை செய்தோம். இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரடியாக இந்த பாதையை ஆய்வு செய்வார். அதன்பிறகு இந்த ரயில் பாதையில் ரயில்களை இயக்குவதற்கான அனுமதி அளிக்கப்படும். மேலமருதூரில் இருந்து மதுரை வரையிலான பாதை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்தால் 3 ஆண்டுகளில் புதிய ரயில் பாதை திட்டம் முழுமையாக முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

மான்சிங்Jan 14, 2022 - 02:35:36 PM | Posted IP 108.1*****

இது நாட்டின் வளர்ச்சி பாதையை காட்டுகிறது

ஆனந்Jan 14, 2022 - 12:47:32 AM | Posted IP 108.1*****

விளங்கிரும் நீங்க முழு பாதை அமைக்கறதுக்குள்ள

பெ.ராமர் தூத்துக்குடிJan 13, 2022 - 10:01:12 PM | Posted IP 108.1*****

ஏற்கனவே இருவழிச்சாலை அமைக்கப்பட்ட தூடி மதுரை சென்னை வழித்தடத்தில் இயங்கிக் கொண்டிருந்த (1. கோவை இணைப்பு ரயில் 2. சென்னை பகல்நேர இணைப்பு ரயில் 3. தூடி மானாமதுரை கடலூர் சென்னை ரெயில்) என பல ரயில்களை தூத்துக்குடி மக்கள் இழந்துள்ள நிலையில் இந்த புதிய வழித்தடத்தில் என்ன பயனை மக்களுக்கு வழங்க இருக்கிறது மத்திய அரசு...???

பவுன்ராஜ்Jan 13, 2022 - 09:07:17 PM | Posted IP 162.1*****

திட்டம் தொடங்கி 23 ஆண்டுகள் 135 கி.மீட்டர்?

MauroofJan 13, 2022 - 03:31:51 PM | Posted IP 162.1*****

திட்டம் அறிவிக்கப்பட்டு சுமார் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் 135 கிலோ மீட்டர் தூரம் ரயில் பாதை திட்டத்தில் 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம், இல்லை இல்லை அது ஒரு சாதனை ஓட்டம் நடைபெற்றிருப்பது வல்லரசு கனவின் ஒரு பகுதி எனில் அது மிகை இல்லை.

ராஜாராம்Jan 12, 2022 - 09:47:28 PM | Posted IP 108.1*****

welcome

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory