» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் தளர்வில்லாத ஊரடங்கு : கடைகள் மூடல் - சாலைகள் வெறிச்சோடியது!

ஞாயிறு 9, ஜனவரி 2022 10:37:13 AM (IST)



தூத்துக்குடியில் தளர்வில்லாத முழு ஊரடங்கை முன்னிட்டு இன்று கடைகள் அனைத்து முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. 

தமிழகத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.  மேலும் தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 வரையும், ஞாயிறன்று முழு ஊரடங்கையும் அமல்படுத்த அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து ஞாயிறான இன்று எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள் ஏதுவும் திறக்கப்படவில்லை. காய்கறி மார்க்கெட், மீன், இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில மருந்துக் கடைகள் மற்றும் பால் கடைகள் மட்டும் ஆங்காங்கே திறந்திருந்தன. இதேபோல் வாகனங்கள் எதுவும் இயங்காததால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.



தளர்வில்லா முழு ஊரடங்கை மீறி இருச்சக்கர வாகனங்களில் வெளியே திரிந்தவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுத்தனர். தளர்வில்லா முழு ஊரடங்கை முன்னிட்டு காவல் துறையினரின் வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சிட்டி டவர் சந்திப்பு மற்றும் குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் நேரில் சென்று பார்வையிட்டு, வெளியே சுற்றுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் பேசுகையில், தற்போது ஒமைக்ரான் கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவிவருகிறது. இதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,  அமலில் இருந்து வருகிறது.   ஹோட்டல்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்,  தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம், தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

தூத்துக்குடி நகரில் 25 இடங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 64 முக்கிய இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் இதுவரை முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் என 6,200 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பணம் ரூ. 12,50,000/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வுகளின்போது தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ், மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ், வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகபெருமாள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory