» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா நவ.4ல் தொடக்கம்: நவ.9ல் சூரசம்ஹாரம் - பக்தர்களுக்கு அனுமதியில்லை!!

புதன் 27, அக்டோபர் 2021 5:25:44 PM (IST)

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா நவ.4ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்க உள்ளது. 9ஆம் தேதி நடைபெறும் சூரசம்ஹார விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 04.11.2021 முதல் 15.11.2021 வரை கொண்டாடுதல் மற்றும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுதல் தொடர்பான முன்னேற்பாடுகள் கூட்டம் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் தலைமையில் இன்று (27.10.2021) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

பின்னர் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழர் 04.11.2021 முதல் 15.11.2021 வரை 12 தினங்கள் கொண்டாடப்படுகிறது. இதில் 6ம் நாள் (09.11.2021) அன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் , 07 -ம் நாள் (10.11.2021) அன்று திருக்கல்யாண நிகழ்ச்சியும் மிக முக்கிய நிகழ்வுகள் ஆகும். சூரசம்ஹார நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சார்ந்த பல லட்சம் மக்கள் வருகை தருவார்கள். இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் திருச்செந்தூர் கோவில் அருகில் உள்ள கடற்கரையில் நடைபெறும். 

இந்த ஆண்டு 09.11.2021 அன்று சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில் பிரகாரத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தொலைக்காட்சி மற்றும் உள்ளுர் தொலைக்காட்சி, யூடியுப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய திருக்கோவில் நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும். 09ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி, 10-ம் தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியின்போது பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 12 தினங்கள் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா அனைத்து நிகழ்வுகளும் திருக்கோவில் பிரகாரத்திற்குள் நடைபெறும். 

கந்த சஷ்டி திருவிழாவின்போது பல்வேறு பகுதிகளில் இருந்து 15,000 முதல் 20,000 வரை பக்தர்கள் திருச்செந்தூர் கோயில் பகுதியில் வருகை தந்து இரவில் தங்குவார்கள். மேலும் இங்குள்ள விடுதிகளிலும் பேக்கேஜ் முறையில் ஒரு வார காலத்திற்கு விடுதிகளை பதிவு செய்தும், மடங்களிலும் தங்குவார்கள். இந்த ஆண்டு பக்தர்கள் கோவிலுக்குள் மற்றும் கோவில் வளாகப் பகுதியில் தங்க அனுமதி இல்லை. 

திருச்செந்தூரில் உள்ள விடுதிகள், மடங்கள் மற்றும் மண்டபங்களில் பேக்கேஜ் முறையில் முன்பதிவு செய்து தங்குவதற்கும் அனுமதி இல்லை. கடற்கரை பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. மேலும் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நாட்களை தவிர மற்ற நாட்களில் தினசரி காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 10000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். இதில் 50 சதவிதம் ஆன்லைன் பதிவு செய்தவர்களையும், 50 சதவிதம் நேரில் வருபவர்களும் அனுமதிக்கப்படும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படும். 

திருக்கோவில் நிர்வாகத்தின் மூலம் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். பல்வேறு தற்காலிக கொட்டகைகளை ஏற்படுத்தி கூடுதலாக வரும் பக்தர்களை சமூக இடைவெளியுடன் அமர வைத்து சுவாமி தரிசனத்திற்கு அனுப்ப வேண்டும். இப்பகுதியில் கை கழுவுவதற்கான வசதியும், முககவசமும், சானிடைசர் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல்வேறு துறைகளின் மூலம் ஏற்பாடு செய்யப்படும்.

பக்தர்கள் கோவில் பிரகார பகுதியில் விரதம் இருக்கவோ, அங்கப்பிரதட்சணம் செய்திட அனுமதி இல்லை. கட்டணம் அடிப்படையில் உபயதாரர்கள் மூலம் திருக்கோவில் பிரகாரத்தில் நடைபெறும் தங்கத்தேர் திருவீதி உலா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தனியார் அமைப்புகளுக்கு அன்னதானம் வழங்க அனுமதி இல்லை. திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின்போது நடைபெறும் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் தொலைக்காட்சி மற்றும் உள்ளுர் தொலைக்காட்சி, யூடியுப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யலாம். மேற்கண்ட ஏற்பாடுகளுடன் கோவிட் -19 பாதுகாப்பினை பின்பற்றி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவினை நடத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.

கூட்டத்தில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் குமரகுரு, மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வகுமார், தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர் மற்றும் அலுவலர்கள் கலந்த கொண்டனர். 


மக்கள் கருத்து

PitchaiahOct 28, 2021 - 07:17:47 PM | Posted IP 157.4*****

திருச்செந்தூர் முருகருக்கு அரோகரா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory