» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் சேதங்களை வேளாண் இயக்குனர் ஆய்வு

வெள்ளி 22, ஜனவரி 2021 8:39:31 AM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் சேதம் கணக்கெடுப்பின் போது, தகுதியான எந்தவொரு விவசாயியும் விடுபடக்கூடாது என்று வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூறினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட பயிர் சேதம் கணக்கெடுப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் மாநில வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சார் ஆட்சியர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அதிகாரிகள் கூறும்போது, ‘சமீபத்தில் பெய்த பருவம் தப்பிய மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர்கள் கடும் சேதம் அடைந்து உள்ளது. விளாத்திகுளம், கோவில்பட்டி, கயத்தாறு, புதூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 5 வட்டாரங்களில் அதிக சேதம் ஏற்பட்டு உள்ளது. கருங்குளத்தில் 50 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 997 எக்டேர் பரப்பில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. சிறுதானியங்கள் சுமார் 27 ஆயிரத்து 221 எக்டேரும், பயறு வகை பயிர்கள் 70 ஆயிரத்து 503 எக்டேரும், நெல் 1,254 எக்டேரும் சேதம் அடைந்து இருப்பதாக தெரியவந்து உள்ளது. மாவட்டத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் எக்டேருக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி பேசியதாவது:- மாவட்டத்தில் உள்ள பயிர்சேதங்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும். இந்த சேதங்களை பார்வையிட மத்தியக்குழு விரைவில் வருகிறது. அப்போது, தற்போதைய நிலை இருக்கும் என்று கூற முடியாது. ஆகையால் சேதம் அடைந்த பயிர்கள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தகுதியான எந்த ஒரு விவசாயியும் விடுபடக்கூடாது. அதே நேரத்தில் தகுதி இல்லாத ஒருவர் கூட சேர்க்கப்படக்கூடாது. 100 சதவீதம் முறையான கணக்கெடுப்பாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அதிகாரி இணைந்து சென்று கணக்கெடுக்க வேண்டும். பயிர் சேதத்தை வேளாண்மைத்துறை அதிகாரியும், நில ஆவணங்களை வருவாய்த்துறை அதிகாரியும் கணக்கெடுத்தால்தான் இந்த கணக்கெடுப்பு வெற்றிகரமாக அமையும். நாம் விவசாயிகளுக்காகவும், பொதுமக்களுக்காகவும் தான் பணியாற்றுகிறோம். கணக்கெடுப்பு விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும்போது, வங்கி விவரங்களை தெளிவாக பதிவு செய்ய வேண்டும். நஞ்சை, புஞ்சை பயிர்களை முறையாக வகைப்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.

இந்த கணக்கெடுப்பு பணியை வருகிற 29-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தகுதியானவர்களுக்கு சரியான இழப்பீடு தொகை சென்றடைய வேண்டும். 33 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் கணக்கெடுப்பில் சேர்த்து கொள்ள வேண்டும். அதேபோல் பயிர் மகசூல் குறித்த விவரத்தையும் சேகரிக்க வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொகை அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆகையால் மகசூல் விவரத்தை தெளிவாக சேகரிக்க வேண்டும்.

காப்பீடு தொகையை அரசு வழங்க உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக அதிக இழப்பு ஏற்பட்டதால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வர மறுத்தன. தற்போது மாநில அரசு 80 சதவீதம், இன்சூரன்ஸ் நிறுவனம் 20 சதவீதம் காப்பீட்டு தொகையை வழங்க உள்ளது. ஆகையால் விவசாயிகளுக்கு முறையாக இழப்பீட்டு தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்த பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Black Forest CakesThalir Products
Thoothukudi Business Directory