» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதிச்சநல்லூரில் மூடிய நிலையில் மிகப்பெரிய முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு.

புதன் 8, ஜூலை 2020 3:47:41 PM (IST)ஆதிச்சநல்லூரில் வாழ்விடங்களை தேடும் ஆய்வாளர்கள். மூடிய நிலையில் மிகப்பெரிய முதுமககள் தாழிகள் கிடைத்தது.

உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ம் தேதி மாநில அரசு சார்பில் முதற்கட்டமாக அகழாய்வு பணி துவங்கியது. தொடந்து 40 நாள்களாக ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் மூலம் உலக நாகரீகத்தில் தமிழர்களின் மாண்பை அறியமுடியும். ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் மற்றும் லோகநாதன் தலைமையில் இந்த அகழாய்வு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 40க்கு மேற்பட்ட குழிகள் அமைககப்பட்டு அகழாய்வு பணியை தொடர்ந்து  செய்து வருகின்றனர். இங்கு வித்தியாசமான பொருள்கள் தொடர்ந்து  கிடைத்து வருகிறது. கடந்த 8ம் தேதி 3000 ஆண்டுகள் பழமையான 2 முதுமக்கள் தாழிகள் மற்றும் 2 கை மூட்டு எலும்புகளும், அதன்பின்னர் ஒரு முதுமக்கள் தாழியும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை 15க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள்  இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே சிவகளையிலும் இதுவரை 20க்கு மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.

கடந்த 28 ம் தேதி சிவகளையில் வாழ்விடங்களை தேடி சாமியாத்து சாலையில் உள்ள திரட்டில் அகழாய்வு பணியை துணை இயக்குனர் சிவானந்தம் துவக்கி வைத்தார். அகழாய்வு இயக்குனர் பிரபாகரன்,  தொல்லியல் ஆய்வாளர் தங்கதுரை ஆகியோர் கொண்ட குழு விரைவாக பணி செய்து வருகிறது.ஆதிச்சநல்லூரில் வாழ்ந்தவர்களின் வாழ்விடங்களை கண்டறிவதற்காக ஆதிச்சநல்லூர் ஊரின் மையப்பகுதிகளில் உள்ள இடங்களில் 5 குழிகள் புதிதாக அமைத்து ஆய்வு பணியானது நடைபெற்று வருகிறது.

அதில் முதல்கட்டமாக ஒரு குழியில் முன்னோர்கள் பயன்படுத்திய புலங்கு பொருட்கள் அதாவது மண்பாண்ட மூலமாக சமையல் செய்ய பயன்படுத்தும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த இடத்தில் தோண்டப்பட்ட மண் சாயல்கள் ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் இங்கு மண் படிந்த காலத்தினை கொண்டு இங்குள்ள குடியிருப்பு வருடங்களை கணிக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவருகிறார். ஆதிச்சநல்லூரில் உள்ள ஆதித்தநங்கை கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஆதிச்சநல்லூரில் ஆய்வு செய்யும் போது இவ்வூர் வழியாக தாமிரபரணி பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் ஓடிய சுவடுகள் தெரிகிறது. எனவே ஆய்வு முடிவில் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புகள் வெளிபடும் என உலகமே எதிர்பார்க்கிறது. நேற்று முன்தினம் ஆதிச்சநல்லூர் பரம்பு புளியங்குளம் பாண்டியராஜா கோயில் அருகில் ஒரே குழியில் மூன்று முதுமக்கள் தாழிகள் கிடைத்தது. அதில் ஒரு தாழி மூடப்பட்ட நிலையில் சுமார் 4 அடியில் கிடைத்தது. இந்த முதுமக்கள் தாழி 2004 ல் ஆய்வு நடைபெற்ற போது கிடைத்த முதுமக்கள் தாழிகள் போலவே காணப்பட்டது. மேலும் அருகில் உள்ள முதுமக்கள் தாழி சிதைந்த நிலையில் இருந்தாலும் கூட அதில் எலும்பு கூடுகள் இருப்பதாக கருதப்படுகிறது எனவே அதை எடுத்து ஆய்வுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.

மேலும் ஒரு முதுமக்கள் தாழி 

மேலே கருப்பு கீழே சிவப்பு நிறத்திலும், மற்றொரு மூடி உடைந்த நிலையில் மிகப்பெரிய அளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  மூன்றாவது முதுமக்கள் தாழி சுற்றி ஏராளமான சிறிய சிறிய அளவிலான கிண்ணங்கள் மற்றும் கிண்ணத்தை தாங்கும் தாங்கிகள் மற்றும் சிறு சிறு பானைகளும் கிடைத்துள்ளது. இதையடுத்து ஆதிச்சநல்லூரில் தற்போது வரை 15 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கிடைக்கும் முதுமக்கள் தாழிகளை ஆய்வுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. இந்த ஆய்வு முடிவு வரும் போது மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்ககப்படுகிறது.

இந்த ஆய்வு குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும் போது, மத்திய அரசு மாநில அரசுவுக்கு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்ய அனுமதி கொடுத்து உள்ளார்கள். ஆனால் அவர்கள் பராமரித்து வைத்திருக்கும் 114 ஏக்கருக்குள் அனுமதி கொடுக்கவில்லை. எனவே மாநில அரசு பணிகள் தொல்லியல் துறை வேலியிட்ட இடங்களுக்கு வெளியே தான் ஆய்வு செய்துவருகிறார். இதனால் எடுக்கப்படும் பல பொருள்கள் உடைந்து காணப்படுகிறது. எனவே  வேலிக்குள் உள்ள 114 ஏக்கரில் ஆய்வு செய்ய அனுமதி கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் 144 வருடங்களாக ஆதிச்சநல்லூரில் எடுககப்படும் அகழாய்வு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிடும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes


Thoothukudi Business Directory