» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திரைப்படங்களை ஓடிடியில் வெளியிடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ

வெள்ளி 29, மே 2020 8:14:16 PM (IST)திரைப்படங்களை ஓடிடியில் வெளியிடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். 

கோவில்பட்டி நகராட்சி பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.10 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மதிய உணவு வேளையின் போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளின் தரத்தினை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு முட்டைகளை வழங்கினார். மேலும் துரைசாமிநாடார் கல்லூரியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் தீப்பெட்டி ஏற்றி செல்லும் லாரிகளில் தெளிக்கப்படும் கிருமி நாசினி பணிகளையும், லாரி ஓட்டுநர்களுக்கு உடல் வெப்பநிலை கண்டறியும் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படும் பணிகளையும், வாகனத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, ஓட்டுநரின் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டதற்கான ஒட்டுவில்லைகளை ஓட்டுநர்களிடம் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது: கரோனா வைரஸ் மனித இனத்தையே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உலக அளவில் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவிலே தமிழகத்தில்தான் கரோனா தொற்று நோய் பாதிக்கப்பட்டு பூரண குணம் அடைந்து வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இதற்கு மத்திய சுகாதார குழு தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நல்ல முறையில் கையாண்டு வருகிறது என தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் கருத்தில்கொண்டு 70 சதவித பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளர்வுகள் அளித்துள்ளார்கள். தீப்பெட்டி தொழிலாளர்களின் நலன் கருதி தமிழக முதல்வர் ஒரு மாதத்துக்கு முன்பாக தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கினார்.

அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. மேலும் தீப்பெட்டி தொழிலில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கரோனா உதவி தொகை ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி துரைசாமிநாடார் கல்லூரியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் தீப்பெட்டி ஏற்றி செல்லும் லாரிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் லாரி ஓட்டுநர்களுக்கு உடல் வெப்பநிலை கண்டறியும் கருவி மூலம் பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வாகனத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, ஓட்டுநரின் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டதற்கான ஒட்டுவில்லைகளையும் ஓட்டுநர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. இவைகள் இன்று நேரில் பார்வையிடப்பட்டது.

தமிழக முதல்வர் உத்தரவுப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் கரோனா தொற்று பரிசோதனை ஆய்வகம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் விரைவாக பரிசோதனை முடிவுகள் கிடைக்க பெறுகிறது. இதுவரை 10,532 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. முதல்கட்டமாக 27 நபர்களுக்கு கரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டது. இதில் 26 நபர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்கள். ஒரு நபர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்துள்ளார். பின்னர் 17 நாட்களாக கரோனா தொற்று இல்லாத நிலையில் நமது மாவட்டம் இருந்தது. சென்னை கோயம்பேடு, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நமது மாவட்டத்தை சார்ந்த நபர்கள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறார்கள். 

28.05.2020 அன்று நிலவரப்படி 198 நபர்களுக்கு கரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வருகை தந்த 134 நபர்களும், குஜராத் மாநிலத்தில் இருந்து வருகை தந்த 6 நபர்களும், உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருந்து வருகை தந்த 1 நபர்களும் என மொத்தம் 141 நபர்களுக்கு கரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டது. 103 நபர்கள் பூரண குணம் பெற்று வீடு திரும்பி உள்ளார்கள். 92 நபர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், நமது மாவட்டத்தை சார்ந்த ஒரு நபர் மதுரை மாவட்டத்திலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வெளி மாநிலத்தில் இருந்து வருகை தரும் நபர்களை கண்டறிவதற்கு 15 இடங்களில் காவல் துறை மூலம் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே கொரான்டைன் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிவில் கரோனா தொற்று நோய் இல்லை என்ற அறிக்கை பெற்றதுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். 

கரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்ட நபர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உரிய சிகிச்சை அளிக்கப்படும். பொதுமக்கள் அவசியம் மற்றும் அத்தியாவசிய வேலைக்கு மட்டுமே வெளிவர வேண்டும். வீட்டில் இருந்து வெளி வரும்போது முககவசங்களை அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அரசு தெரிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடித்தால் சமூக பரவல் ஏற்படாத வகையில் தடுக்க முடியம், மேலும் நமது மாவட்டத்தில் கரோனா நோய் பாதிப்பு இல்லாத நிலையில் உருவாக்க முடியும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோவில்பட்டி நகராட்சியில் 2வது பைப்லைன் திட்டம் செயல்படுத்த ரூ.81.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்கள். அவர் வழியில் செயல்படும் தமிழக முதல்வர் மேலும் ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்து நேரடியாக வருகை தந்து இத்திட்டத்தினை துவக்கி வைத்தார். மேலும் அனைத்து குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் இணைப்புகளை ஏற்படுத்திட ரூ.18 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மேற்கொள்ளும்போது கோவில்பட்டி நகராட்சி பகுதியில் சேதம் அடைந்த சாலைகள் சீரமைக்கபட உள்ளது. சுமார் 14.34 கி.மீ. தூரம் உள்ள சாலைகளை சீரமைப்பதற்காக் அரசு முதல் கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டது. மேலும் ரூ.20 கோடி மதிப்பில் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளும் முடிவு பெற்றால் அனைத்து சாலைகள் மேம்படும், அனைத்து குடியிருப்புகளும் குடிநீர் இணைப்புகள் கிடைக்கும்.

தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் இல்லை, வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெட்டுக்கிளிகள் தாக்குதல் போல் தமிழகத்தில் வந்துவிடாக்கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சேலம், ஈரோடு, நாமக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 54 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கடந்த ஆண்டு மக்காசோள பயிரில் அமெரிக்கா படைப்புழு தாக்கியது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதனை கருத்தில்கொண்டு மானாவாரி விவசாயத்திற்கு ஒரு எக்டருக்கு ரூ.5000மும், பாசன விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு ரூ.15000மும் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைத்துள்ளது. 

மேலும் கடந்த ஆண்டைப்போல் நடப்பு ஆண்டிலும் மக்காசோள பயிரில் அமெரிக்கா படைப்புழு தாக்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறு விமானம் மூலம் ரூ.48 கோடி செலவில் அரசு மருந்து தெளித்தது. மேலும் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு நீர் தேக்கத்தில் இருந்து மே 31ம் தேதி வரை தண்ணீர் திறக்க ஆணையிட்டார்கள். விவசாயிகள் நீர் திறக்கப்பட்டதை வருகிற ஜூன் 10ம் தேதி வரை நீடிக்க கோரிக்கையாக தெரிவித்துள்ளார்கள். இந்த கோரிக்கையினையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,

திருட்டு விசிடியை ஒழிக்க முதன் முதலில் சட்டம் கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதன் பயனாக திருட்டு விசிடி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது 90 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஓடிடி பிரச்சினை என்பது திரைப்படதுறையினருக்கு மட்டுமல்ல உலகளவிய பிரச்சினை, ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவதால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.அரசு இதனை தடுக்க முடியும் என்றால் எப்போதோ தடுத்து இருப்போம்,அரசு நேரிடையாக தடுக்க முடியாது, திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், பிரபல திரை நச்சத்திரங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து பேசி இது குறித்து முடிவு எடுக்க அரசு உறுதுணையாக இருக்கும் என்றும், மத்தியரசு மின திருத்த சட்டம் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும், விவசாயிகளை பாதிக்கும், தமிழக அரச தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் எனவே சட்டத்தினை தமிழக முதல்வர் மறுபரீசிலனை செய்ய மத்தியரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். காலம் தாழ்த்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம், கோவில்பட்டி வட்டாட்சியர் மணிகண்டன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பழனிசாமி, கோவில்பட்டி நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க பிரமுகர்கள் பரமசிவன், சேதுரத்தினம், வரதராஜன், திலகரத்தினம்,.ராஜவேல், பழனிசெல்வம், அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், இனாம்மமணியாச்சி கூட்டுறவு சங்க தலைவர் மகேஷ்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், பழனிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

உண்மமே 30, 2020 - 10:55:08 AM | Posted IP 162.1*****

தியேட்டர் ஒரு கொள்ளையடிக்கும் இடம் , கள்ளகாதலர்கள் வந்து போகும் இடம் , சமூக விரோதிகள் கூடும் இடம் , ஆனால் வீட்டில குடும்பத்துடன் படம் பார்ப்பதால் என்ன தப்பு?

அருண்மே 30, 2020 - 12:49:15 AM | Posted IP 162.1*****

பிரதமரே டிஜிட்டல் இந்தியானு போய்ட்டு இருக்கார். நீங்க அங்குட்டு போங்க மிஸ்டர். என்ன முக்குனாலும் ஒரு கட்டத்துல OTT தான் மேலோங்கி நிக்கும். UPI வந்ததுக்கப்புறம் யாராச்சும் NEFT யூஸ் பண்றாங்களா?? சொல்லுங்க சார். மக்கள் யூஸ் பண்ணாதான் தியேட்டருக்கு வருமானம். தியேட்டர் ஓடுனாதான் அரசுக்கு வருமானம். ஆல்ரெடி அவன் 50 ருவாய்க்கு விக்குற பப்சுக்காகவே மிடில் கிளாஸ் யாரும் அதிகமா போக மாட்டாங்க. இப்போ OTT வந்த பிறகு புது படம் பாக்க ஸ்நாக்ஸ் செலவு மொத்தமே 200 கூட தாண்டாது மொத்த குடும்பத்துக்கும். அதும் பழம், கடலை..,, வீட்டு சாப்பாடு(Healthy food) பண்ணி சாப்டுட்டே படம் பாக்கலாம். அரசுக்கு வருமானம் வேணும்னா வேற எதா ஐடியா பண்ணுங்க மிஸ்டர்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes
Anbu Communications

Thoothukudi Business Directory