» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நோய் கட்டுப்பாடு பகுதிகளில் எந்த ஒரு தொழிலும் செய்வதற்கு அனுமதி இல்லை: ஆட்சியர் தகவல்

திங்கள் 4, மே 2020 4:11:36 PM (IST)தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக தூத்துக்குடி மாவட்ட கூட்டரங்கில் குறு, சிறு தொழில் நிறுவனங்களுடன் தொழிற்சாலைகள் இயங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குறு, சிறு தொழில் நிறுவனங்களை இயக்குது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு நிறுவனங்களில் உரிமையாளர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  பேசியதாவது: இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு மே 4ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சுய ஊரடங்கு உத்தரவு இன்று முதல் மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு எந்த பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்கலாம் எனவும், எந்த பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்க கூடாது எனவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலும் சுய ஊரடங்கு உத்தரவு இன்று முதல் மே 17ம் தேதி வரை கடைபிடிக்கபடுகிறது. மத்திய, மாநில அரசின் வழிகாட்டுலின்படி நமது மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதி இல்லை. நோய் கட்டுப்பாடு பகுதிகளில் (Containment Zone) எந்த ஒரு தொழிலும் செய்வதற்கு அனுமதி இல்லை. இந்த பகுதிகளில் ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகளே தொடர்ந்து நீடிக்கும். கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் (Spinning Mills) அனுமதி பெற்று 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி அளிக்கபடுகிறது. ஊரக மற்றம் பேரூராட்சி பகுதிகளில், உள்ள அனைத்து தொழிற்சாலைகள் உரிய அனுமதி பெற்று செயல்பட அனுமதிக்கப்படும். 

15,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கேற்ப, ஜவுளித்துறை நிறுவனங்களை 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்படவும், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், மின் சாதன விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல எந்தவிதமான தடையும் இல்லை. தங்களது தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை ஒருங்கிணைந்து ஒரு வாகனத்தில் ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் அந்த வாகனத்தில் 50 சதவிதம் நபர்களை மட்டும்தான் ஏற்றி செல்ல வேண்டும். மேலும் அவர்களை தொழிற்சாலை பகுதிகளில் தங்க வைத்து தினம்தோறும் அவர்களது உடல்நிலையை கண்காணிக்க வேண்டும். தொழிற்சாலைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கை கழுவுவதற்கு சாணிடைசர், சோப் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். மேலும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் போது பணியாளர்கள், தொழிலாளர்கள் முககவசங்களை அணிந்து பணியாற்றிட வேண்டும். மேலும் 50 சதவிதம் தொழிலாளர்களுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து பணியாற்றபடுகிறதா என்பதை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.

மின் வணிக நிறுவனங்கள் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம். மேலும் மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 55 வயதுக்கு மேல் உள்ள நபர்களை பணியில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக இருதய நோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்களை பணியில் ஈடுபடுத்த கூடாது. 200 பணியாளர்கள் கொண்டு செயல்படும் தொழிற்சாலைகளில் வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் மருத்தவரை நேரடியாக தொழிற்சாலைக்கு வரவழைத்து தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் உடல் நலம் பரிசோதனை செய்ய வேண்டும். 

நோய் கட்டுப்பாடு பகுதியில் இருந்து எந்த ஒரு பணியாளரும், தொழிலாளரும் பணியில் ஈடுபடுத்த கூடாது. தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தங்களது நிறுவனத்தின் மூலம் அடையாள அட்டை வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை. தங்களுக்கு சொந்தமான காரில் உற்பத்தி பொருட்களை மற்ற மாவட்டங்களுக்கு ஏற்றி செல்ல அனுமதி இல்லை. லாரி, டிரக்ஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு அனுமதி உண்டு. 

ஏற்கனவே இயங்கி கொண்டுருக்கும் தொழிற்சாலைகளை தொடர்ந்து இயங்கலாம். புதிதாக இயங்க உள்ள தொழிற்சாலைகள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடித்து ஆய்வு செய்து இயங்க அனுமதிக்கப்படும் என பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன், மாநகராட்சி ஆணையர் வி.பி.ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் கண்ணன், உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் மாரியப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் (ஸ்பிக்) அமிர்தகௌரி, துடிசியா தலைவர் நேரு, உப்பு, தீப்பெட்டி, செங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Black Forest Cakes

Anbu Communications


Thoothukudi Business Directory