» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பஸ்-லோடு ஆட்டோ மோதல்; 3 பேர் காயம்: 10 ஆடுகள் பலி

ஞாயிறு 8, டிசம்பர் 2019 8:52:04 AM (IST)

எட்டயபுரத்தில் பஸ்-லோடு ஆட்டோ மோதிய விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர். மேலும் லோடு ஆட்டோவில் இருந்த 10 ஆடுகள் இறந்தன.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள தோப்புநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (66). இவர் ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் நேற்று அதிகாலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வாரச்சந்தையில் விற்பனை செய்வதற்காக 28 ஆடுகளை லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு எட்டயபுரத்துக்கு புறப்பட்டார். அப்பகுதியைச் சேர்ந்த சீனியப்பன் மகன் ராமர் (27) லோடு ஆட்டோவை ஓட்டிச்சென்றார். அவர்களுடன் லோடு ஆட்டோவில் அதே ஊரைச் சேர்ந்த அழகுராஜா (40), கருணசேகரன் (37) ஆகியோரும் சென்றனர். எட்டயபுரம் மின்வாரிய அலுவலகம் அருகில் நாற்கர சாலையில் சென்றபோது, கோவையில் இருந்து சாத்தான்குளத்துக்கு சென்ற தனியார் ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக லோடு ஆட்டோவின் பின்னால் மோதியது. 

இதில் நிலைதடுமாறிய லோடு ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லோடு ஆட்டோவில் இருந்த சுப்புராஜ், அழகுராஜா, கருணசேகரன் ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்களை சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் லோடு ஆட்டோவில் இருந்த 10 ஆடுகளும் இறந்தன. லோடு ஆட்டோவின் மீது மோதிய ஆம்னி பஸ் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது. இதில் பஸ்சில் இருந்த 39 பயணிகளும் அதிர்‌‌ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆம்னி பஸ் டிரைவரான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ் மகன் செந்தில்குமாரிடம் (27) விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam
Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory