» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி மெத்தனம்: கீதாஜீவன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

வியாழன் 7, நவம்பர் 2019 5:00:51 PM (IST)

மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் அண்மையில் பெய்த மழையால் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதிலும் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு மாநகராட்சி நிர்வாகத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். காரணம் ஒவ்வொரு ஆண்டு மழைக்காலத்தின் போதும் லூர்தம்மாள்புரம், கலைஞர் நகர், சங்குகுளி காலனி, அன்னைதெரசா மீனவர் காலனி, SKSR காலனி, பாக்கியநாதன் விளை, வெற்றிவேல் புரம், ராஜீவ்காந்தி நகர், மகிழ்ச்சிபுரம், P&T காலனி, சக்திவிநாயகர் புரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்வது வழக்கம். 

இந்தப் பகுதிகளில் சாலை அமைக்கும் போது கழிவுநீர் செல்வதற்கு வழி ஏற்படுத்திவிட்டு சாலை அமைக்கவும் என்று எத்தனை முறை சொல்லியும் மாநகராட்சி அதிகாரிகள் கமிஷன் மட்டுமே நோக்கம் என்ற அடிப்படையில் சாலை அமைத்துவிடுகிறார்கள். இதனால் இந்தப் பகுதிகளில் தண்ணீர் கட்டுவது வாடிக்கையாகிவிட்டது. சரி, தண்ணீரையாவது உடனடியாக அகற்ற ஏற்பாடு செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. ஒருவார காலமாக தண்ணீர் தேங்கி சாக்கடை நீராக மாறி மாபெரும் சுகாதார சீர்கேட்டை உருவாக்குகிறது.

அதுபோல என்றைக்கும் இல்லாமல் இந்த ஆண்டு VMS நகர், சின்னகன்னுபுரம் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததற்கு காரணம் ஸ்டெர்லைட்டுக்கு மேற்கு பகுதிகளில் இருந்து சி.வ.கண்மாய்க்கு வரும் தண்ணீரை கண்மாய்க்கு செல்லவிடாமல் கண்மாய் செப்பனிட டெண்டர் எடுத்த கம்பெனிக்காரர் தடுத்து நிறுத்தியதே ஆகும். அதுபோல முத்துகிருஷ்ணாபுரம், கிருஷ்ணராஜபுரம் 1, 2, 3 தெருக்கள் மகிழ்ச்சிபுரம், பாரதிநகர், நிகிலேசன் நகர், புஷ்பாநகர், குறிஞ்சிநகர், பெரியசாமி நகர், சக்திவிநாயகர் புரம், ராஜகோபால் நகர், அன்னை இந்திரா நகர், கோயில்பிள்ளை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தொட்டியில் கழிவுநீர் எடுத்து 1 மாதமாகிறது. 

இதனால் இந்தப் பகுதியில் மழைநீரோடு கழிவுநீரும் சேர்ந்து சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுத்துவிட்டது. அதுபோல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீர் வண்டி தயார் செய்யவில்லை. தண்ணீர் தேங்கும் பகுதிகளில் உடனடியாக தண்ணீரை வெளியேற்ற இஞ்சின் மற்றும் பம்புகள் தயார் செய்யவில்லை மொத்தத்தில் மழை வெள்ள நேரத்தில் மாநகராட்சி நிர்வாகம் படுத்து துங்கிவிட்டது. மாநகராட்சியில் புதிய தீர்வைபோடுதல், புதியவீட்டு எண் வழங்குதல், கட்டிட வரைபடம் அனுமதி, உள்ளிட்ட அடிப்படை வேலைகள் எதுவும் நடக்கவில்லை. மக்கள் விண்ணப்பித்து ஓராண்டு காத்து இருக்கிறார்கள்.

சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை மாநகரில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு ஒதுக்கியும் அந்தப் பணிகளும் துவக்கப்படவே இல்லை. குறிப்பாக மேட்டுப்பட்டி குடிநீர் வசதிக்காக ரூ. 30லட்சம் ஒதுக்கீடு, மற்றும் P&T காலனி 3வது தெரு சாலை, VMS நகர் தெருவிளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒதுக்கிய பணம் பணி துவங்கவே இல்லை. மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மாநகரம் முழுவதும் கொசுமருந்து அடித்திட வேண்டும். ஆங்காங்கே தேங்கியுள்ள கழிவுநீரை கழிவுநீர் வண்டி அல்லது மாற்று ஏற்பாடு செய்து உடனடியாக அகற்ற வேண்டும். பெரிய வண்டி போகாத இடங்களில் சிறிய வண்டி ஏற்பாடு செய்யலாம்.

மாநகராட்சியால் தீர்வை போடப்படாத மக்கள் வாழும் பகுதிகளான மேட்டுபட்டி, சங்குளி காலனி, சத்யாநகர், ராஜபாண்டி நகர், சூசைநகர், இனிகோநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வீட்டு இணைப்பு அல்லது பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டும். அண்மையில் பெய்த மழை வெளள பாதிப்புகளுக்கு வஉசி துறைமுக சபையிடம் நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி எம்பி அவர்களும், சட்டமன்ற உறுப்பினரான நானும் வைத்த கோரிக்கையை ஏற்று 4 நாட்கள் தீயணைப்புத்துறை வண்டி அனுப்பி வெற்றிவேல்புரம், கோயில்பிள்ளைநகர், ராஜீவ்காந்திநகர், போன்ற பகுதிகளில் கடல்போல் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றினார்கள்.

ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் அடிப்படை பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் ஏற்கனவே இருந்த பூங்காக்களை மட்டும் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பித்துவரும் மாநகராட்சி நிர்வாகம் இனியாவது தொலை நோக்கு பார்வையோடு ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக மழைநீர் தேங்கும் பகுதிகள் எவை என்று கண்டறிந்து அந்தப் பகுதிகளில் நிரந்தர தீர்வாக தண்ணீர் செல்வதற்கு கழிவுநீர் கால்வாய்கள் அமைத்து சுகாதாரத்தை காத்திட கேட்டுக் கொள்கிறேன். மாநகராட்சியில் அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, சாலைவசதி, கான்வசதி முக்கியத்துவம் அளித்திட மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன்.


மக்கள் கருத்து

அஷ்ரப்Nov 9, 2019 - 06:21:10 AM | Posted IP 162.1*****

ஆதிபராசக்தி நகரில் இதே நிலை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory