» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாமிரபரணி கரையோர பகுதியில் மெகா தூய்மை பணி: ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தொடங்கி வைத்து பங்கேற்பு

சனி 19, அக்டோபர் 2019 3:16:26 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி தூய்மை திட்டத்தின்கீழ் 10,000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்ட தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் மெகா தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  தொடங்கி வைத்து பங்கேற்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி தூய்மை திட்டத்தின்கீழ் 60க்கும் மேற்பட்ட கல:லூரி மற்றும் பள்ளிகளை செர்ந்த 7500 மாணவ, மாணவிகளும், கிராம உதயம் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 3,000க்கும் மேற்பட்டோரும் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நபர்களும் என 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மெகா தூய்மை பணிகள் இன்று (19.10.2019) நடைபெற்றது. கலியாலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  கலந்துகொண்டு தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் சுத்தம் செய்யும் பணிகளை தொடங்கி வைத்து பங்கேற்றார்.

பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 60 கி.மீ. தூரம் செல்லும் தாமிரபரணி ஆற்றினை மிஷன் கிளீன் தாமிரபரணி இயக்கத்தின்கீழ் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பே மிஷன் கிளீன் தாமிரபரணி இயக்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நமது மாவட்டத்திலும் மிஷன் கிளீன் தாமிரபரணி இயக்கத்தின்கீழ் ஆற்றின் கரையோரங்களில் உள்ள முட்புதர்கள், கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் 2 நாட்களாக நடைபெற்றது. இன்று நடைபெறும் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் மெகா தூய்மை பணிகளில் 7,500 மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றினை நம்பி 3 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் உள்ளனர். 

தாமிரபரணி ஆற்று கரையோரப்பகுதியில் மெகா தூய்மை பணிகளுக்கு 90 ஜே.சி.பி. இயந்திரங்கள், 15 ஹிட்டாச்சி இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பணிகள் பல்வேறு தனியார் மற்றும் தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக என்.எல்.சி. என்.டி.பி.எல். நிறுவனத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளன. மேலும் இந்த நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி ரூ.1 கோடி மதிப்பில் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறவுள்ளது. மேலும் அந்தந்த பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படவுள்ளது. தூய்மை பணிகளில் மாணவ,மாணவிகளை ஈடுபடுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். 

தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் இந்த 3 நாட்கள் மட்டுமல்லாது தொடர்ந்து நடைபெறும். அடுத்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மீண்டும் தொடங்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். இதேபோல், மருதூர், திருவைகுண்டம் அணைக்கட்டுகளும் தூய்மைப்படுத்தப்படும். மேலும், பல்வேறு பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின்கரை பகுதியில் குப்பை கொட்டும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்படும். மேலும் கழிவுநீர் கலக்கும் பகுதிகளும் கண்டறியப்பட்டு அதற்கான மாற்று திட்டங்களும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரபரணி ஆற்றினை தூய்மையாக வைத்துக்கொள்ள அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தொடர்ந்து திருவைகுண்டம் முருகன் கோவில் பகுதி, ஆழ்வார்திருநகரி படித்துறை பகுதி, ஏரல் சேர்மன் கோவில் பகுதி, ஆத்தூர் கரைப்பகுதி மற்றும் முக்காணி கரைப்பகுதி ஆகிய பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று அங்கு நடைபெறும் தூய்மை பணிகளையும் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் காலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், அண்ணா பல்கலைக்கழக முதல்வர் சத்யநாதன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தனப்ரியா, கிராம உதயம் நிறுவனர் சுந்தரேசன் மற்றும் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், பல்வேறு கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள், கிராம உதயம் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsAnbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory