» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 21ம் தேதி வீர வணக்க நாள் : எஸ்பி அருண் பாலகோபாலன் தகவல்

சனி 19, அக்டோபர் 2019 12:57:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும்போது இன்னுயிர் நீத்த காவல் துறையினருக்கு, அவர்கள் செய்த தியாகத்தை நினைவுகூறும் வகையில் வருகிற 21ம் தேதி வீர வணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் வெளியிட்ட செய்திக்குறிப்பு : வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீர வணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அதற்கு முந்தைய வாரமான, இந்த வாரத்தில் அவர்களை நினைவு கூறும் வகையில் காவல்துறை சார்பாக மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டும் வரும் திங்கட்கிழமை அக்டோபர் 21ம் தேதி உயிர்தியாகம் செய்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்படும். அவ்வாறு காவல்துறைக்காக உயிர் தியாகம் செய்த தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் பணியாற்றி உயிர்த்தியாகம் செய்து, வீர மரணமடைந்த காவலர்கள் பழனிதாஸ், மந்திரம்பிள்ளை, ராமச்சந்திரன் மற்றும் முருகன் ஆகியோர் செய்த தியாகத்தையும், அவர்களின் வீர தீர செயல்களை கீழ்கண்டவாறு நினைவுகூர்ந்து, அவர்களின் குடும்பத்தாரையும் இதன் மூலம் கௌரவிக்கப்படுகிறது.

1) தூத்துக்குடி மாவட்டத்தில் நாரைக்கிணறு புறக்காவல் நிலையமாக இருந்தபோது பணியாற்றிய காவலர் பழனிதாஸ் 04.05.1962 அன்று போலீஸ் பார்ட்டி சகிதம் மதுவிலக்கு ரோந்து சென்ற போது சட்டவிரோத கும்பலால் கொலை செய்யப்பட்டு, காவல்துறைக்காக தன்னுயிர் நீத்து வீர மரணமடைந்தார்.இவரது சொந்த ஊர் திருநெல்வேலி, இவர் கிருஷ்ணகுமார் மற்றும் ஆவுடையம்மாள் தம்பதிகளின் புதல்வராவார். இவருக்கு சுப்பம்மாள் என்ற மனைவியும், சுடலைமணி என்ற மகனும், பேச்சியம்மாள் என்ற மகனும் உள்ளனர்.

2) கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த காவலர் மந்திரம்பிள்ளை 31.12.1980 அன்று திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, திருவேங்கடம் காவல் நிலைய சரகத்தில் உள்ள குறிஞ்சாகுளத்தில் நடைபெற்ற விவசாய போராட்டத்தில் சட்ட விரோத கும்பலால் கொல்லப்பட்டு காவல்துறைக்காக தன்னுயிர் நீத்து, வீரமரணமடைந்தார். இவரது சொந்த ஊர் முடிவைத்தானேந்தல் அஞ்சல் எம்.புதூர் ஆகும். இவர் சண்முகசுந்தரம்பிள்ளை மற்றும் வள்ளியம்மாள் தம்பதிகளின் புதல்வராவார். இவருக்கு ஆவுடையாச்சியம்மாள் என்று மனைவியும், வள்ளியம்மாள், உலகம்மாள், பெருமாள் ஈஸ்வரி, முத்துலெட்சுமி, பிரேமா என்ற மகள்களும், சண்முகசுந்தம் என்ற மகனும் உள்ளனர்.

3) எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ராமச்சந்திரன் 13.06.1984 அன்று திருட்டு வழக்கு குற்றவாளிகளை கைது செய்யச்சென்றபோது, நான்கு பேர் கொண்ட அந்தக்கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். அவரது வீர தீர செயலை பாராட்டி, அவருக்கு தமிழக முதல்வர் விருது வழங்கப்பட்டது. இவரது சொந்த ஊர் கோவில்பட்டி, இவரது மனைவி வெள்ளம்மாள், மகன்கள் சிதம்பரம், சண்முகநாதன், செல்வநாயகம், அய்யாத்துரை மற்றும் சரவணக்குமார் ஆகியோர் உள்ளனர்.

4) புதூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த முதல் நிலை காவலர் முருகன் 16.11.2001 அன்று தேர்தல் முன் விரோதம் காரணமாக சல்லிச்செட்டிபட்டி மற்றும் சங்கரலிங்கபுரம் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த இரு பிரிவினர்களிடையே ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 350க்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக கூடி ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். அந்தக் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சென்ற புதூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஷாஜஹான் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அந்த சட்டவிரோத கும்பல் போலீசார் மீது கற்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காவலர் முருகன் கொல்லப்பட்டு, காவல்துறைக்காக உயிர்த்தியாகம் செய்து, வீரமரணமடைந்தார். அவருடன் சென்ற போலீசாரும் பலத்த காயமடைந்தனர்.

வீரமரணமடைந்த முதல் நிலை காவலர் முருகன் சொந்த ஊர் எட்டயாபுரம் தாலுகா, கருப்பூராகும். இவர் சுப்பையா மற்றும் நாகம்மாள் தம்பதிகளின் புதல்வராவார். இவருக்கு ரமணிபாய் என்ற மனைவியும், பாலாஜி என்ற மகனும் உள்ளனர். மேற்படி உயிர்த்தியாகம் செய்த மேற்படி காவலர்கள அனைவருக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக வீர வணக்கம் செலுத்தப்படுகிறது. அவர்களது குடும்பத்தாரை கௌவரப்படுத்தும் வகையில் காவலர் வீர வணக்க நாளான 21.10.2019 வரும் திங்கட் கிழமை கௌரவிக்கப்படுகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsAnbu Communications


Black Forest Cakes


Thoothukudi Business Directory