» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனுநீதி முகாமில் ரூ.6 ¾ இலட்சம் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

வியாழன் 15, ஆகஸ்ட் 2019 9:01:15 AM (IST)எப்போதும்வென்றான் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் நிகழ்ச்சியில் 66 பயனாளிகளுக்கு ரூ.6.75 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  ஆட்சியர் சந்தீப் நந்தூரி, வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் எப்போதும்வென்றான் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் பொது மக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடன் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் 66 பயனாளிகளுக்கு ரூ.6.75 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:தமிழக அரசு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தினை தேர்ந்தெடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற ஏதுவாக மனுநீதி நாள் முகாம் நடத்திட தெரிவித்துள்ளது. அவ்வகையில் ஓட்டப்பிடாரம் வட்டம் எப்போதும்வென்றான் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது.

இம்முகாம்கள் நடத்தப்படுவதன் நோக்கம் அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து விழிப்புணர்வு பெற்று அவைகளை பெற வேண்டும் என்பதுதான். மேலும் பொதுமக்கள் அரசு அலுவலகத்தை தேடி வந்து சிரமப்படாமல் மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து அரசு அலுவலர்களும் கிராமங்களுக்கு வருகை தந்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெற்று நிறைவேற்றுவதுதான் மனுநீதிநாள் முகாம் ஆகும். இம்மனுநீதி நாள் நடைபெறுவதையொட்டி முன்னதாக இப்பகுதியில் 185 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 78 மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகள் வேண்டிய தகுதியான நபர்களுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள்மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இன்று நடைபெறும் விழாவில் வருவாய் துறை சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 23 பயனாளிகளுக்கு ரூ.2.71 இலட்சம் மதிப்பிலான முதியோர் உதவித்தொகை மற்றும் விபத்து நிவாரண உதவித்தொகை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வருவாய் துறை மூலம் வீட்டுமனைப்பட்டா 38 நபர்களுக்கு ரூ.3.95 லட்சம் மதிப்பிலும், வேளாண்மை துறை மூலம் 3 விவசாயிகளுக்கு ரூ.2,123/- மதிப்பிலான இடுபொருட்களும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.8,000/- மதிப்பிலான எம்பிராய்டரி தையல் இயந்திரமும், ஒரு பயனாளிக்கு ரூ.5,000/- மதிப்பிலான தேய்ப்பு பெட்டியும் என மொத்தம் 66 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மழைநீர் சேமிப்பதற்காக குளங்களை தூர்வாரும் பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும், சமூக பொறுப்பு நிதி மூலமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 522 சிறுகுளங்கள் தலா ரூ.1 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் வரும் மழைக்காலத்திற்குள் முடிக்கப்படும். எப்போதும்வென்றான் பகுதியில் வண்ணான் ஊராட்சி கண்மாய், மானூர் ஓடை கண்மாய் ஆகியவைகள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுகின்றன. மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் மக்களின் பங்கு மிக அவசியமானதாகும். குளங்கள் தூர்வாரப்படுவதால் அதிக அளவிலான நீர் தேக்கப்பட்டு விவசாய பணிகளுக்கும் குடிநீர் திட்டங்களுக்கும் எவ்வித பற்றாக்குறையும் இல்லாத நிலை ஏற்படும். 

கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹக்டேர் வரை மக்காச்சோளம் பயிரிடப்பட்டு படைப்புழு தாக்குதலால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பீடு ஏற்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விவசாயிகளின் நலன் கருதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்து இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மக்காச்சோள விவசாயிகள் படைப்புழு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேளாண்மை துறை அலுவலர்களால் பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் ஆடு வழங்கும் திட்டம், கறவை மாடு வழங்கும் திட்டம், புறக்கடை கோழி வழங்கும் திட்டம் உள்ளிட்டவைகளும் நமது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. 

இங்கு பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளனர். இவைகளின்மீது துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். அரசின் திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக தெரிந்துகொண்டு தாங்கள் பயன்பெறுவதுடன் தங்களது நண்பர்களுக்கும் அவைகளை எடுத்துசொல்லி அவர்களும் பயன்பெற உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பேசினார். முன்னதாக சுகாதாரத்துறையின் மூலம் நடத்தப்பட்ட மருத்துவ முகாம், சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை மற்றும் பல்வேறு துறைகள் மூலம் நடத்தப்பட்ட கண்காட்சியையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். மேலும், முகாம் நடைபெற்ற வளாகத்தில் மரக்கன்று நடவு செய்தார்.

இம்முகாமில் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, துணை ஆட்சியர் (பயிற்சி) சுப்புலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கவிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட திட்ட அலுவலர் முத்துலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முகசுந்தரம், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ரகு மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory