» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு

புதன் 14, ஆகஸ்ட் 2019 8:32:08 AM (IST)திருச்செந்தூரில் ரூ.1.34 கோடி மதிப்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டும் பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ , இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன் பட்டினம் கிராமத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு ரூ.1.34 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டும் பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் அமைக்கப்பட்டு வரும் வட்ட வடிவிலான மணிமண்டபம், நூலகம் மற்றும் வாசிப்பு அறையுடன் கூடிய நிர்வாக கட்டிடம், பார்வையாளர்கள் பயன்படுத்த ஆண், பெண்களுக்கான கழிப்பறை, செராமிக் டைல்ஸ் படிக்கட்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாய்வு தளம் ஆகியவை அமைக்கும் பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தென்மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் , மக்களால் கொடை வள்ளல் என்று போற்றப்படும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டப்படும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பினை அறிவித்தார்கள். மேலும், உடனடியாக அரசாணை வெளியிட்டு ரூ.1,34,28,000/- நிதி ஒதுக்கீடு செய்து 60 சென்ட் நிலத்தில் மணிமண்டபம் கட்டுமான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் முழு உருவ வெண்கல சிலை தயார் செய்யப்பட்டுள்ளது. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் குடும்பத்தினர் சிலையை பார்வையிட்டு ஒப்புதல் அளித்துள்ளனர். இங்கு விரைவில் சிலை நிறுவப்பட உள்ளது.

மேலும், மணிமண்டபத்தில் கூடுதலாக சில பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதால் தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நிதி ஒதுக்கீடு பெற்று கூடுதல் பணிகளும் முடிக்கப்படும். மணிமண்டப பணிகள் முடிக்கப்பட்டு செப்டம்பர் 24ம் தேதி சின்னையா என்று அழைக்கப்படும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள் அன்று தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக வந்து திறக்க வேண்டும் என்று டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் குடும்பத்தினரும், இங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அவர்களின் கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நேரடியாக வந்து மணிமண்டபத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (திருவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திகுளம்), திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், திருச்செந்தூர் கூட்டுறவு வங்கி தலைவர் கோட்டை மணிகண்டன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமார், திருச்செந்தூர் வட்டாட்சியர் தில்லைப்பாண்டி மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Nalam Pasumaiyagam


Black Forest Cakes
Thoothukudi Business Directory