» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மெகா லோக் அதாலத் : மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்

வெள்ளி 12, ஜூலை 2019 8:03:30 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மெகா லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்)  நடைபெற உள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் மாவட்ட சமரச மையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணைப்படி, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மெகா லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நாளை (சனிக்கிழமை) நடத்தப்படுகிறது. இந்த மக்கள் நீதிமன்றம் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும். தற்போது 2-வது மக்கள் நீதிமன்றம் நாளை நடக்கிறது.

இதில் மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம், சாத்தான்குளம் ஆகிய 5 இடங்களில் மொத்தம் 18 அமர்வுகள் மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இந்த அமர்வுகளில் பணியில் உள்ள நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் அமர்ந்து வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ளனர். இந்த அமர்வு காலை 10 மணிக்கு தொடங்கி, வழக்குகள் முடியும் வரை தொடர்ந்து நடைபெறும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையிலான வங்கி சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் மற்றும் குடும்பநல வழக்குகள் என சுமார் 5 ஆயிரம் வழக்குகள் இனம் காணப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளில் இருதரப்பினரும் வரவழைக்கப்பட்டு, அவர்களின் சம்மதத்தின் பேரில் தீர்வு காணப்படும். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இதுபோன்ற வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை கோர்ட்டில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளில் ரூ.79 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான 10 வழக்குகளுக்கும், மோட்டார் வாகன வழக்குகளில் ரூ.1 கோடியே 12 லட்சத்து 40 ஆயிரம் வரையிலான 25 வழக்குகளுக்கும் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 91 லட்சத்து 98 ஆயிரம் வரையிலான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

அதேபோன்று கோர்ட்டுக்கு விசாரணைக்கு வரும் முன்பே தீர்வு காணப்படும் வங்கி சார்ந்த வழக்குகளில் இதுவரை 756 வழக்குகள் எடுக்கப்பட்டு 102 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு உள்ளது. இதன்மூலம் ரூ.80 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இருக்கிறது. ஆக மொத்தம் இதுவரை ரூ.2 கோடியே 72 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பிலான வழக்குகளில் தீர்வு காணப்பட்டு உள்ளது. நாளை சுமார் ரூ.7 கோடிக்கும் அதிகமான வழக்குகளுக்கு தீர்வு காண வாய்ப்பு உள்ளது. 

வழக்காடிகள், பணம் சம்பந்தப்பட்ட வழக்கு, குடும்பநல வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் உடனடியாக தீர்வு காணலாம். இதில் தீர்வு கண்டால் மேல்முறையீடு கிடையாது. சம்பந்தப்பட்ட வழக்காடிகள் செலுத்தி உள்ள கோர்ட்டு கட்டணம் உடனடியாக திருப்பி கொடுக்கப்படும். வங்கியில் கடன் பெற்று உள்ள மாணவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் முழுமையாக வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் மாணவர்கள் பயன்பெறுவார்கள். எனவே இந்த மக்கள் நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்காடிகளும் பங்கேற்க வேண்டும். இதுதொடர்பாக வழக்காடிகளுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் கூறினார். பேட்டியின்போது மகிளா கோர்ட்டு நீதிபதி குமார சரவணன், கூடுதல் முதன்மை மாவட்ட நீதிபதி சிவஞானம், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி முருகேசன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சாமுவேல் பெஞ்சமின் ஆகியோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Anbu Communications


Thoothukudi Business Directory