» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சைல்டு லைனுக்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை: ஆட்சியர் அறிவுறுத்தல்

வெள்ளி 12, அக்டோபர் 2018 8:06:21 AM (IST)

சைல்டு லைன் அழைப்புக்கு வரும் புகார்கள் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்..
 
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி டி. இளங்கோவன் முன்னிலையில் நடைபெற்ற மாவட்ட குழந்தை பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 86 குழந்தைகள் இல்லத்தில் தங்கி படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மேலும், பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
 
குறிப்பாக, குழந்தைகள் திருமணம் குறித்து பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பதாகைகளை வைத்து அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் தொடர்பாக பள்ளி மாணவர், மாணவிகளிடையே குறும்படங்கள் மூலம் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுதவிர, சைல்டு லைன் அமைப்பின் அவசர அழைப்புக்கான 1098 என்ற எண் குறித்து குழந்தைகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 1098 எண்ணில் வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து, தூத்துக்குடி, தட்டப்பாறை, அரசினர் குழந்தைகள் இல்லத்திலுள்ள வ.உ.சி. நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துதல் மற்றும் தொழிற்பயிற்சிப் பள்ளி தொடங்குதல், ஆதரவற்ற குழந்தைகளுக்காக செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லங்களின் மின் இணைப்பு கட்டணத்தை மாற்றுதல், குழந்தைகள் இல்லங்களுக்கு அருகிலுள்ள குடிநீர் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வசதி செய்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing



New Shape Tailors



crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory