» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெளிமாநிலத்தவர் விபரங்களை வைத்திருக்க வேண்டும் : துாத்துக்குடி எஸ்பி அறிவுரை

வெள்ளி 14, செப்டம்பர் 2018 6:24:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநிலத்தவர்களின் விபரங்கள் அடங்கிய முழு பதிவேடுகளை நிறுவனஉரிமையாளர்கள் பராமரிக்க வேண்டுமென துாத்துக்குடி மாவட்ட எஸ்பி முரளி ராம்பா தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநிலத்தவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பது சம்மந்தமான கூட்டம் இன்று (14.09.2018) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., முரளி ரம்பா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட எஸ்பி முரளி ரம்பா, சமீப காலமாக அதிக அளவில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் குடிபுகுந்து இங்குள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களிடம் பணியாற்றி வருகின்றனர். 

இவர்கள், சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புசாரா துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சிலர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவது கவனத்திற்கு வந்துள்ளது. இது உள்ளுர் பொதுமக்களுக்கு பாதுகாப்பின்மையை உருவாக்குகிறது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு வெளி மாநில தொழிலாளர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது மிகவும் அவசியமானதாக உள்ளது.

ஆகவே மேற்படி பிற மாநில குடியேற்ற தொழிலாளர்கள் சட்டம் 1979ன்படி Inter-state Migrant Workmen Act 1979 (Regulation and conditions of Service) வெளிமாநிலத்தொழிலாளர்களை பயன்படுத்துகின்ற அனைத்து நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள், அந்த தொழிலாளர்களுக்கு, அவர்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒட்டி, அவர்களைப்பற்றிய முழு விபரங்கள் அடங்கிய பாஸ்புத்தகம் வழங்கியிருக்கவேண்டும், மேலும் அந்த நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் அவர்களுக்கென தனியாக பதிவேடுகள் பராமரிக்க வேண்டும். 

அதில் அவ்வாறு இடம் பெயர்ந்துள்ள வெளிமாநில தொழிலாளர்களின் பெயர், உற்றார், உறவினர் பெயர், தொலைபேசி, செல்பாேன் எண், முழு முகவரி, அவர்களது பணியின் தன்மை, அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்களது பணி நேரம் போன்ற முழுமையான தகவல்களை அந்தப்பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். இது தவிர தமிழக அரசு ஆணை எண். 91 (தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை) நாள் 03.03..2016ன்படி வரையறுக்கப்பட்டுள்ள படிவத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் புகைப்படமும் வைத்திருக்கவேண்டும். 

ஆகவே இவற்றை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள், அவ்வாறு செய்யத்தவறியவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், வெளிமாநிலத்தொழிலாளர்களை பணிக்கு வைத்துள்ள அனைத்து தொழில்துறையினர், அமைப்பு சாரா துறையினர் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் அனைவரும் கடைபிடிக்கவேண்டும் என்றும், இவற்றை தொழிலாளர் நல ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் தொழிற்சாலை ஆய்வாளர் ரவிக்குமார் தீவிரமாக அமல்படுத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

இக்கூட்டத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பொன்ராமு, குற்ற ஆவணக்கூட காவல் துணை கண்காணிப்பாளர் லிங்கத்திருமாறன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், குற்ற ஆவணக்கூட காவல் ஆய்வாளர் கஸ்தூரி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சத்தியநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

ஒருவன்Sep 15, 2018 - 10:01:39 PM | Posted IP 162.1*****

வெளிமாநிலத்தவரை கூலிக்கு அழைத்தவர்கள் யார் ??? அழைத்தவர் அவர்களையும் கட்டாயம் விபரம் வைத்திருக்க வேண்டும்.. ஸ்டெர்லைட், பவர் பிளான்ட், போன்ற வட நட்டு தொடர்புள்ள கம்பெனிகளே தூத்துக்குடியில் நிறைய வெளிமாநிலத்தவர்கள் உள்ளனர்.. நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் .

நிஹாSep 15, 2018 - 04:37:49 PM | Posted IP 141.1*****

1979 லேயே சட்டம் இருந்திருக்கிறது. இருக்கும் சட்டத்தை சரியா செயல்படுத்தியிருந்தாலே பல பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாம்.

சாமான்யன்Sep 14, 2018 - 11:03:28 PM | Posted IP 172.6*****

சரியான முயற்சி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


CSC Computer Education


Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory