» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை முடிவு: தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்றம் அறிவுரை!

புதன் 13, ஜூன் 2018 3:10:14 PM (IST)தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏப்ரல் 24 ஆம் தேதியன்று வைகோ தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை, இன்று (13.06.2018) நீதியரசர் சி.டி.செல்வம், நீதியரசர் பஷீர் அகமது ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வைகோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜ்மல்கான் அவர்கள், "2018 மே 28 ஆம் தேதி அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், காற்று மாசுபடுதல், தண்ணீர் மாசுபடுதல் குறித்த சட்டப் பிரிவுகளின் அடிப்படையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு முன்பு கொடுக்கப்பட்ட அனுமதி காலாவதி ஆகிவிட்டது; மீண்டும் புதிய அனுமதி கொடுக்கவில்லை என்பதால், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 48 ஆவது பிரிவின் அடிப்படையில், ஆலை நிரந்தரமாக மூடப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளது.

இதை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் தீர்ப்பு ஆயத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ முறையீடு செய்து அனுமதி பெற்றால், தமிழக அரசு ஆணை செல்லுபடி ஆகாது. ஆலையை மீண்டும் இயக்குவதற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான காரணங்களை விளக்கமாகப் பட்டியல் இட்டு, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான இந்திய அரசியல் சட்டத்தின் 48 ஆவது பிரிவின் கீழ் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக, கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆலை நிரந்தரமாக மூடும் சூழல் உருவாகும்” என்று கூறி, அரசு ஆணையை நீதிபதிகளிடம் அளித்தார்.நீதியரசர் சி.டி.செல்வம் அவர்கள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு, தமிழக அரசு வழக்கறிஞரிடம் பின்வருமாறு தெரிவித்தார்.

"காற்றுச் சட்டம், தண்ணீர்ச் சட்டப் பிரிவுகளின் கீழ் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுக்காததை மட்டுமே குறிப்பிட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் 48 ஆவது பிரிவைக் காரணம் காட்டி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு வழங்கிய அரசு ஆணை திட்டவட்டமாகவும், தெளிவாகவும் இல்லாததால், தமிழக அரசு இதை ஒரு கொள்கை முடிவாக எடுத்து அரசு ஆணை பிறப்பிப்பதற்கு இந்த நீதிமன்றம் யோசனை கூறுகிறது. இந்த யோசனையை தமிழக அரசுக்கு அரசு வழக்கறிஞர் தெரிவித்துச் செயல்படலாம்” என்று கூறி வழக்கு விசாரணையை ஜூன் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: ஜூன் 6 ஆம் தேதி தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் மேல் முறையீட்டுத் தீர்ப்பு ஆயத்தில் ஸ்டெர்லைட் வழக்கு விசாரிக்கப்பட்டபோது, நான் செய்தியாளர்களிடம் என்ன கூறினேனோ அதுதான் இப்போது நடந்து இருக்கின்றது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு தமிழக அரசு ஏஜெண்டாகச் செயல்படுகின்றது. 

அதை எதிர்த்து, 22 ஆண்டுகளாக நான் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடி வருகின்றேன். தூத்துக்குடியில் மே 22 ஆம் தேதி 50 ஆயிரம் மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அறப்போராட்டம் நடத்தியபோது, தமிழக அரசு காவல்துறையை ஏவி, ஈவு இரக்கமின்றி 14 பேரைச் சுட்டுக் கொன்றதுடன், பலரைப் படுகாயப்படுத்தி மிருகத்தனமான அடக்குமுறையை ஏவிவிட்டது. இதனால் பொதுமக்கள் உள்ளம் எரிமலையானதால், மக்கள் கொந்தளிப்புக்கு அஞ்சி, ஆலையை மூடுவதாக ஒரு கண் துடைப்பு கபட நாடகத்தை நடத்தி, நீதிமன்றத்தில் செல்லுபடியாகாத ஒரு அரசு ஆணையைப் பிறப்பித்துள்ளது.

ஆலையை இயக்குவதற்கு டெல்லி தீர்ப்பு ஆயத்திலோ, நீதிமன்றத்திலோ ஸ்டெர்லைட் நிர்வாகம் உரிய நிலையை ஏற்படுத்திக் கொள்ளட்டும். அதன்பிறகு, நீதிமன்றம் கூறுவதால் நாங்கள் என்ன செய்ய முடியும்? என்று மக்களையும் ஏமாற்றி விடலாம் எனத் திட்டமிட்டு தமிழக அரசு செயல்பட்டுள்ளது. அதனால்தான், ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு நீதிமன்றத்தில் ஆணை பெற்றாலும், இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, மராட்டிய மாநில இரத்தினகிரியில் நடந்ததுபோல் தூத்துக்குடியிலும் அரங்கேற்றி, ஆலையை நிரந்தரமாக அகற்றுவோம் என்று கூறி வருகின்றேன். ஸ்டெர்லைட் பிரச்சினையில் தமிழக அரசின் முகத்திரை கிழிந்துவிட்டது. இவ்வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் அஜ்மல்கான் அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்தேன் எனக் கூறினார்.


மக்கள் கருத்து

சாமிJun 13, 2018 - 03:39:13 PM | Posted IP 162.1*****

இவரது போராட்டம் "உள்ளேயும்" "வெளியேயும்" எல்லாருக்கும் தெரியும் - குபேரபுரிக்கு சொந்தக்காரர் ஆனது எப்படி என்பதும் தெரியும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Joseph Marketing


CSC Computer EducationNew Shape Tailors


Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory