» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியீடு : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திங்கள் 28, மே 2018 5:16:07 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர்  பழனிசாமி ஆலோசனை நடத்தினார். நாளை சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டோரை நேரில் சென்று சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். இதில், மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி, அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22 ஆண்டுகளாக வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிறுவனம் இயங்கி வருகின்றது. கடந்த 23.3.2013 அன்று, மேற்படி தொழிற்சாலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததின் அடிப்படையில், தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 29.3.2013 அன்று உத்தரவிட்டார்கள். அதன் பேரில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தொழிற்சாலை உடனடியாக மூடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம், 8.8.2013 அன்று ஆலையை இயக்குவதற்கு அனுமதியளித்தது. 

இத்தீர்ப்பை எதிர்த்தும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்றும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2013ல் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். அம்மனு விசாரணையில் இருந்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கான இசைவாணை 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், ஆலை நிர்வாகம் இதனை புதுப்பிக்க விண்ணப்பித்தது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஏற்கெனவே விதித்திருந்த மாசு கட்டுப்பாடு தொடர்பான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால், 9.4.2018 அன்று, அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதையடுத்து, ஆலை இயங்கவில்லை. 24.5.2018 அன்று முதல், ஆலைக்கான மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்த சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட நிபந்தனைகளை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றாத காரணத்தினால், தூத்துக்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் இன்று (28.5.2018), தலைமைச் செயலகத்தில் என்னையும், துணை முதலமைச்சர் அவர்களையும், மூத்த அமைச்சர்களையும், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளையும் சந்தித்து, ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை பிறப்பிக்குமாறு வைத்த கோரிக்கையும், தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகளும், தமிழ்நாடு அரசால் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது.

"மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற தாரக மந்திரத்தோடு செயல்பட்டு வந்த மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியிலேயே மாண்புமிகு அம்மாவின் அரசும், மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருவதனால், பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பு அளித்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுத்து, அதற்கான அரசாணைகளை இன்று (28.5.2018) வெளியிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals




Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors

Joseph Marketing



Thoothukudi Business Directory