» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்துார் கோயிலில் 20ம் தேதி மாசித்திருவிழா கொடியேற்றம்: மார்ச் 1ல் தேரோட்டம்
வெள்ளி 9, பிப்ரவரி 2018 8:54:28 AM (IST)
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 20ம் தேதி மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மார்ச் 1ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

கொடியேற்றத்தை முன்னிட்டு பிப்., 20-ம் தேதி செவ்வாய்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கும்ப லக்கனத்தில் கோயில் செப்பு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப். 24-ம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோயிலில் (சிவன் கோயிலில்) இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது.
பிப். 26-ம் தேதி அன்று ஏழாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கும்ப லக்கனத்தில் அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து 9 மணிக்கு மேல் ஆறுமுகப்பெருமான் வெற்றி வோ் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேருகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சிவன் அம்சத்தில் தங்க சப்பரத்தின் மீது சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
வௌ்ளை மற்றும் பச்சை சாத்தி வீதிஉலா:
பிப்., 27ம் தேதி எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை சுவாமி பிரம்மா அம்சத்தில் பெரிய வௌ்ளிச்சப்பரத்தில் வௌ்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் வந்து அங்கு வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து நண்பகல் 11.30 மணிக்குள் சுவாமி விஷ்ணு அம்சத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்துகோயில் சேருகிறார். பிப் 28-ம் தேதியன்று ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வௌ்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
தேரோட்டம், தெப்ப உற்சவம்:
மார்ச் 1-ம் தேதி பத்தாம் திருவிழா அன்று திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கும்ப லக்கனத்தில் விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதியில் வலம் வந்து அருள் பாலிக்கும் தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 2-ம் தேதி பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. மார்ச் 3-ம் தேதி 12-ம் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறுகின்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் ராமசாமி, அலுவலக கண்காணிப்பாளர் யக்ஞ நாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருவிழா நாட்களில் பூஜை நேரங்கள் மாற்றம்:
திருவிழாவை முன்னிட்டு பிப் 20-ம் தேதி 1ம் திருவிழா மற்றும் 26ம் தேதி 7ம் திருவிழா அன்று கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது. 2ம் திருவிழாவான பிப் 21ம் தேதி அன்றும் மற்றும் பிப் 23, 24ம் தேதிகளிலும் கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது. திருவிழாவின் மற்ற நாட்களில் கோயில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது என கோயில் இணை ஆணையர் பாரதி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தரம் உயர்த்தப்பட்ட கால்நடை பன்முக மருத்துவமனை: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 5:11:00 PM (IST)

தூத்துக்குடியில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: எஸ்பி முரளி ரம்பா துவக்கி வைத்தார்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:58:47 PM (IST)

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 3:59:42 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 3:50:55 PM (IST)

காயல்பட்டணம் நகராட்சி சார்பில் மக்கள் நல பணிகள் : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 12:17:23 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து சென்ற வேன் விபத்து: பெண் பலி.. 10பேர் படுகாயம் - திருப்புத்தூர் அருகே சோகம்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 11:39:07 AM (IST)
