» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துறைமுகத்தில் முடங்கிய மலேசிய மணல்: மக்கள் பயன்படுத்த வழி கிடைக்குமா?

திங்கள் 13, நவம்பர் 2017 10:35:27 AM (IST)தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஏறத்தாழ 54 ஆயிரம் டன் மணல் முடங்கிக் கிடக்கிறது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து இறக்குமதியாளர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆற்றுப்படுகைகளில் இருந்து மணல் அள்ளப்பட்ட நிலையில், அரசே மணல் விற்பனையில் ஈடுபடும் என அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்து அதற்கான இணையதள சேவையையும் தொடங்கி வைத்தார். தேவைக்கு ஏற்ற அளவு மணல் கிடைக்காததால் தமிழகத்தில் கட்டுமானப் பணிகள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாற்று மணலாக எம்-சாண்ட் என அழைக்கப்படும் பாறைப் பொடியை பயன்படுத்த பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும் தயக்கம் காட்டி வரும் நிலை உள்ளது.

இருப்பினும், ஆங்காங்கே உள்ள சில மணல் குவாரிகளில் இருந்து கிடைக்கும் மணல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் கட்டுமானத் துறை கடந்த சில மாதங்களாகவே மந்தமான சூழலில் காணப்படுகிறது. இதற்குத் தீர்வு எப்போது கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், மலேசியாவில் இருந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு கப்பல் மூலம் புதுக்கோட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று கடந்த மாதம் 21 ஆம் தேதி 54 ஆயிரத்து 433 டன் மணல் இறக்குமதி செய்த தகவல் கட்டுமானத் துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 
வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்வது தமிழகத்தில் இதுவே முதல் முறை ஆகும். இருப்பினும், விலை அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் தற்போது வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் விலையை விட மூன்று மடங்கு குறைவான விலைக்கு இறக்குமதி மணல் கிடைக்கும் என்றும், கட்டுமானப் பணிக்கு உகந்ததாக இருக்கும் என்றும் தகவல் பரவியதால் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
 
ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, இறக்குமதி செய்யப்பட்ட மணலை துறைமுகத்தில் இருந்து வெளியே கொண்டு வர பல்வேறு சிரமங்களை சந்தித்த தனியார் நிறுவனத்தினர், தற்போது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர். மலேசியாவில் இருந்து 7 கோடியே 67 லட்சத்து 86,346 ரூபாய் மதிப்புள்ள மணலுக்கு 15 லட்சத்து 4,096 ரூபாய் சுங்க வரி மற்றும் ஜிஎஸ்டி என மொத்தம் 38 லட்சத்து 39,347 ரூபாய் செலுத்தியதாகவும், கப்பலில் இருந்து துறைமுக வளாகத்தில் கொட்டப்பட்ட மணல் 54 லாரிகளில் 864 டன் மணல் ஏற்றிச்செல்லப்பட்ட நிலையில், அவற்றை தற்போது போலீஸார் தடுத்து வைத்திருப்பதாகவும் இறக்குமதி நிறுவனத்தைச் சேர்ந்த பரமசிவன் குற்றம்சாட்டியுள்ளார்.

முறையான அனுமதி பெற்று இறக்குமதி செய்யப்பட்ட மணல் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாமல் துறைமுகத்திலேயே முடங்கிக் கிடப்பதால் தாங்களுக்கு தினமும் பல லட்சம் இழப்பீடு ஏற்பட்டு வருவதாகவும், இவ்வாறு நெருக்கடி கொடுப்பதால் வரும் காலங்களில் மணல் இறக்குமதியில் ஈடுபட மற்றவர்கள் தயங்குவார்கள் என்றும் இறக்குமதியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
 
இதனால், தூத்துக்குடி துறைமுகத்துக்கு தினமும் ரூ. 2 லட்சம் இழப்பீடு ஏற்படுவதாகவும், கேரளத்தில் இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டபோது முதல்வர் பினராயி விஜயன் நேரில் தலையிட்டு இறக்குமதிக்கு பச்சைக்கொடி காட்டியது போல தமிழகத்திலும் இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு மணல் இறக்குமதியை ஊக்குவித்தால் தமிழகத்தின் ஆறுகளை காப்பாற்ற வழி இருக்கிறது எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.எஸ். அர்ஜூனன் கூறியது: இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற இறக்குமதியாளர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். மணல் தேவையால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே, அரசு இந்த விவகாரத்தில் நல்ல முடிவை எடுத்து நீதிமன்றத்தில் தெரிவித்து மணல் இறக்குமதிக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
 
தமிழகத்தில் உள்ள ஆற்றுப்படுகைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில், மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளில் குறைந்த விலைக்கு கிடைக்கும் மணலை நாம் சலிக்காமல் அப்படியே பூச்சுக்கு பயன்படுத்தக் கூடிய நிலையில் இருப்பதாலும், உப்புத்தன்மை குறைவாக இருப்பதாலும் அதிகளவு மணல் இறக்குமதி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 
சாலை வழியாக கொண்டு சென்றால் தானே தடுப்பீர்கள் என தமிழக நிர்வாகத்தை நோக்கி கேள்வி எழுப்பும் இறக்குமதியாளர்கள் மீண்டும் கப்பல் வழியாக கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்லலாமா? துறைமுகத்தில் இருந்து நேரடியாக ரயில் மூலம் கேரளத்துக்கு கொண்டு செல்லலாமா? என யோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் முதல் முறையாக மணல் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், அவற்றை தமிழக மக்கள் பயன்படுத்த அரசு வழி செய்ய வேண்டும் என்றும், தொடர்ந்து மணல் இறக்குமதி செய்யப்பட்டு கட்டுமானத் துறையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பில் கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் உள்ளனர் என்பதே மறுக்க முடியாத உண்மை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers


Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors
crescentopticalsThoothukudi Business Directory