» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் தமிழ்ப்பெண்கள் மீது பாலியல் வன்முறைகள்: சர்வதேச மனித உரிமைகள் குழு

வியாழன் 22, டிசம்பர் 2011 9:06:21 AM (IST)

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக சர்வதேச மனித உரிமைகள் குழு தெரிவித்து உள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், அப்பாவி தமிழர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.

போர் முடிந்த பின்னரும் அங்கு தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக பிரசல்ஸ் நகரைச் சேர்ந்த சர்வதேச மனித உரிமைகள் குழு ஒன்று தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அந்த குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடந்து வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்து உள்ளன. போரில் கணவர் இறந்ததாலோ அல்லது பெற்றோர் இறந்ததாலோ பல பெண்கள் தனியாக வசிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது.

சில பெண்களின் கணவர்களை விசாரணைக்காக ராணுவத்தினர் பிடித்து வைத்து இருப்பதால் அந்த பெண்கள் தனிமையில் வசிக்கிறார்கள். சில பெண்கள் குழந்தைகளுடன் வசிக்கிறார்கள். அப்படி வசிக்கும் பெண்கள் தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படலாம் என்ற அச்சத்திலேயே வாழ்கிறார்கள். சில பெண்கள் பாலியல் பலாத்காரமும் செய்யப்படுகிறார்கள்.

தங்களுடைய கணவர் அல்லது குடும்பத்தில் உள்ள மற்ற ஆண்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி விசாரிப்பதற்காக ராணுவத்தினரிடம் செல்லும் சமயங்களில் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். அந்த பகுதிகளில் ராணுவத்தினரை கட்டுப்படுத்தவும் முடியாது.

பாலியல் பலாத்கார கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் அதுபற்றி யாரிடமும் புகார் செய்வதும் இல்லை. அப்படி புகார் செய்தால் ராணுவத்தின் பிடியில் இருக்கும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த புகாரை இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் நிஹல் ஹபுராச்சி மறுத்து உள்ளார். அப்படிப்பட்ட சம்பவங்கள் எதுவும் நடந்ததாக தகவல் எதுவும் இல்லை என்று அவர் கூறி இருக்கிறார்.


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads














Thoothukudi Business Directory