» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்டது: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு!

வெள்ளி 17, ஜனவரி 2025 10:59:12 AM (IST)

பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. 

ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழித்து ஒழிப்பதாக கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான மோதல் தொடர்ந்தது.

போர் காரணமாக இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஒருபக்கம் ஏற்பட்ட நிலையில், மறுப்பக்கம் அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதாக சர்வதேச அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வந்தன. இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் பணிகளில் அமெரிக்கா மற்றும் கத்தார் ஈடுபட்டன.

அமெரிக்கா மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடைபெற்றது. இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்கா மற்றும் கத்தார் கடந்த புதன் கிழமை அறிவித்தது. இந்த நிலையில், போர் நிறுத்தம் மற்றும் அதற்கு பிந்தைய வழிமுறைகள் குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

அதன்படி, பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் அமைச்சரவை கூட்டம் இன்று கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

"பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் குறித்து நிபந்தனைகள் எட்டப்பட்டுள்ளதாக பேச்சுவார்த்தை குழுவால் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்குத் தெரிவிக்கப்பட்டது," என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடைசி நிமிட சலுகைகளை பெறுவதற்காக ஒப்பந்தத்தின் முக்கிய பகுதிகளை ஹமாஸ் மறுத்ததாக அவரது அலுவலகம் வியாழக்கிழமை குற்றம் சாட்டி இருந்தது. இந்த குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்தது.

"பிரதமர் அரசியல்-பாதுகாப்பு அமைச்சரவையை கூட்ட உத்தரவிட்டார். பின்னர் ஒப்பந்தத்தை அங்கீகரிக்க அரசாங்கம் கூடும்," என்று நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பணயக்கைதிகளின் குடும்பங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், அவர்கள் திரும்பியதும் அவர்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அது மேலும் கூறியது.

இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தால், போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வரும். இதைத் தொடர்ந்து பாலஸ்தீன கைதிகளுக்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளை பரிமாறிக்கொள்வது, போருக்கு நிரந்தர முடிவுக்கான விதிமுறைகள் இறுதி செய்யப்படும்.

போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை மத்தியஸ்தர்களான கத்தார் மற்றும் அமெரிக்கா கடந்த புதன் கிழமை அறிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Arputham Hospital






Thoothukudi Business Directory