» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மனித உரிமை மீறல் : இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு

செவ்வாய் 4, அக்டோபர் 2022 8:32:44 AM (IST)

இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் ஐ.நா. தீர்மானத்துக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடந்ததை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலகினர். ரணில் விக்ரமசிங்கே அதிபர் ஆன நிலையில், அவரது ஆட்சியை எதிர்த்தும் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது ராணுவமும், போலீசாரும் தாக்குதல் நடத்தும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில், இலங்கையில் நடக்கும் இத்தகைய மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் தீர்மானத்தை ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்ய சில நாடுகள் முடிவு செய்துள்ளன. இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, மலாவி, மான்டனெக்ரோ, வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இத்தீர்மானத்தை கொண்டு வருகின்றன. தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதை ஐ.நா. மனித உரிமை ஆணையர் தீவிரப்படுத்த வேண்டும்.

மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டவும், ஆய்வு செய்யவும் மனித உரிமை அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். எதிர்கால மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வியூகம் வகுக்க வேண்டும். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நடக்கும் மனித உரிமை மீறல்கள் கவலை அளிக்கின்றன. போராட்டக்காரர்கள் மீது தாக்குதல், கைது நடவடிக்கை, அரசு ஆதரவாளர்களுக்கு எதிரான வன்முறை, எம்.பி.க்கள் வீடு தீவைப்பு போன்ற நிகழ்வுகள் கவலை அளிக்கினறன. இலங்கையில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். தவறு செய்பவர்களை பொறுப்பேற்க செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அல்பேனியா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், செக்கியா, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, லாட்வியா, லிச்டென்ஸ்டின், லிதுவேனியா, லக்சம்பர்க், மார்ஷல் தீவு, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, ஸ்லோவாகியா, சுவீடன், துருக்கி ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளன.

இந்த தீர்மானம் மீது இந்த வாரம் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிகிறது. இந்த பின்னணியில், இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய உயர் பாதுகாப்பு மண்டலங்களை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கலைத்துள்ளார். கொழும்பிலும், புறநகர்களிலும் இந்த மண்டலங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன.

இதற்கு எதிர்க்கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதற்கிடையே, வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பிய ரணில் விக்ரமசிங்கே, அந்த மண்டலங்களை கலைக்க உத்தரவிட்டார். இதற்கிடையே, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில், இலங்கை மனித உரிமை மீறல்களுக்கு எதிரான அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அங்கு வசிக்கும் இலங்கை பிரதிநிதிகளிடம் அந்நாட்டு எம்.பி.க்கள் 2 பேர் உறுதி அளித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory