» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நான்சி பெலோசி தைவான் பயணம்: 20 போா் விமானங்களை பறக்கவிட்டு சீனா எதிா்ப்பு!

புதன் 3, ஆகஸ்ட் 2022 10:27:24 AM (IST)அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி தைவான் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து தைவான் வான்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட போா் விமானங்களை சீனா பறக்கவிட்டது. 

தைவான் தனி நாடாக செயல்பட்டு வந்தாலும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா கருதி வருகிறது. தைவானை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம் என்றும் அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்கப்போவதில்லை என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறாா். தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதைப் போல், அந்தத் தீவுக்கு எந்தத் தலைவா் சென்றாலும் அதற்கு சீனா கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்தச் சூழலில், ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நான்சி பெலோசி, தைவானுக்குச் செல்வாா் என்று கடந்த வாரம் தகவல் வெளியானது. இதற்கு சீனா கடும் தெரிவித்தது. எனினும், மலேசியாவிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட நான்சி பெலோசி, தைவான் தலைநகா் தைபேயை நேற்றிரரவு வந்தடைந்தாா். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தின் உயா்நிலைத் தலைவா் ஒருவா் தைவான் வந்தது இதுவே முதல் முறையாகும். 

இதுவரை இல்லாத வகையில், நான்சி பயண் செய்த விமானத்தின் ரேடாா் பயணப் பாதையை நொடிக்கு நொடி 3 லட்சத்திற்கும் அதிகமானோா் கண்காணித்துள்ளனா். தென் சீன கடல்பகுதியை தவிா்த்து இந்தோனேசிய கிழக்கு பகுதியைப் பயன்படுத்தி நான்சி தைவான் சென்றடைந்தாா். பின்னா் அவா் வெளியிட்ட அறிவிப்பில், ‘தைவானின் துடிப்பான ஜனநாயகத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதை உறுதிப்படுத்தவே இந்தப் பயணம் அமைந்துள்ளது’ என்றாா்.

நான்சி பெலோசியின் இந்தப் பயணத்தால் தங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீனா எச்சரித்துள்ளது. மேலும், வான் மற்றும் கடற்பகுதியில் ஆகஸ்ட் 4 முதல் 7-ஆம் தேதி வரையில் ராணுவ ஒத்திகை நடைபெறும் என்றும் இது அமெரிக்கா - தைவான் விவகாரத்தையும், சுதந்திரத்தை கோரும் தையான் அமைப்புகளுக்கான எச்சரிக்கை என்றும் சீன ராணுவம் தெரிவித்ததாக அந்நாட்டு அரசு ஊடகமான ஷின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி, ‘அமெரிக்காவின் துரோகத்தால் தைவானின் தேச நம்பகத்தன்மை திவால் நிலைக்கு சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் சில அமெரிக்க அரசியல்வாதிகள் நெருப்புடன் விளையாடுகிறாா்கள். இதன் மூலம் அமைதியை நாசம் செய்யும் அமெரிக்காவின் முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது’ என்றாா்.

நான்சி பெலோசி தைவான் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து தைவான் வான்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட போா் விமானங்களை சீனா பறக்கவிட்டதாக தைவான் தெரிவித்தது. மேலும், தைவான் எல்லையையொட்டி பகுதிகளில் சீனா தனது ராணுவத் தளவாடங்களைக் குவித்து ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory