» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க வரலாற்றில் முதல் முறை: பெண் நிதி அமைச்சராக ஜேனட் ஏலன் நியமனம்

புதன் 27, ஜனவரி 2021 8:42:58 AM (IST)

அமெரிக்க நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம், அந்நாட்டில் முதல் பெண் நிதி அமைச்சர் என்கிற பெருமையை ஜேனட் ஏலன் பெற்றுள்ளார். 

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் அமைச்சரவையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி அமைச்சர்பதவிக்கு பொருளாதார பெண் வல்லுநரான ஜேனட் ஏலனை (வயது 74) ஜோ பைடன் நியமித்தார். அமெரிக்க நிதி அமைச்சராக ஜேனட் ஏலனை நியமிப்பது தொடர்பாக செனட் சபையில் நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடந்தது. 

சபையின் தலைவரான துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தலைமையில் நடந்த இந்த வாக்கெடுப்பில் ஜேனட் ஏலன் நியமனத்துக்கு ஆதரவாக 84 உறுப்பினர்களும், எதிராக 15 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.அதனைத் தொடர்ந்து ஜேனட் ஏலனை அமெரிக்க நிதி அமைச்சராக நியமித்து செனட் சபை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் அமெரிக்க வரலாற்றிலேயே நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்கிற பெருமையை ஜேனட் ஏலன் பெறுகிறார். அவர் விரைவில் முறைப்படி பதவி ஏற்பார்.

அமெரிக்காவின் பிரவுன் மற்றும் யேழ் பல்கலைக்கழகங்களில் பொருளாதார பட்டப்படிப்புகளை முடித்த ஜேனட் ஏலன், உலகின் பல்வேறு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக இருந்தபோது, இவரின் திறமை அறியப்பட்டது. அமெரிக்காவில் வேலையின்மை, பொருளாதாரச் சிக்கல் நிலவியபோது, இவரின் கொள்கைகள், திட்டங்கள் அவற்றிலிருந்து மீண்டுவர உதவின.

அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவில் 1994 முதல் 1997-ம் ஆண்டுவரை ஜேனட் ஏலன் பதவி வகித்துள்ளார். அமெரிக்க அதிபராக கிளிண்டன் இருந்தபோது, அவரின் பொருளாதார ஆலோசகராக ஜேனட் ஏலன் பதவி வகித்துள்ளார். 2004 முதல் 2010-ம் ஆண்டுவரை சான்பிரான்சிஸ்கோ மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராக ஜேனட் ஏலன் இருந்தார். 2014 முதல் 2018-ம் ஆண்டுவரை அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக ஜேனட் ஏலன் இருந்தார்.

அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் சிறப்படைய ஜேனட் ஏலனின் வழிகாட்டுதல்கள், நிதிக்கொள்கைகள் மீது தங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது என்று செனட் சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர். செனட் சபையால் உறுதிப்படுத்தப்பட்ட ஜோ பைடனின் 3-வது மந்திரி சபை உறுப்பினர் ஜேனட் ஏலன் ஆவார். இதற்கு முன் தேசிய உளவுத்துறை இயக்குநராக அவ்ரில் ஹையின்சும், ராணுவ மந்திரி லாய்ட் ஆஸ்டினும் நியமிக்கப்பட்டனர். உள்துறை அமைச்சராக டோனி பில்கினை நியமிப்பதற்கு செனட்சபை விரைவில் ஒப்புதல் வழங்கும் என்று தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam PasumaiyagamThalir Products


Black Forest Cakes
Thoothukudi Business Directory