» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு
திங்கள் 18, ஜனவரி 2021 8:55:44 AM (IST)
அமெரிக்க அதிபராக வரும் 20-ம் தேதி ஜோ பைடன் பதவியேற்கும் விழா நடைபெறும் நிலையில் நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 20-ந் தேதி அவர் பதவியேற்க உள்ளார். இந்தத் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய டிரம்ப் தொடக்கத்தில் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து வந்தார்.
இதற்கிடையில், தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோரை அமெரிக்க மத்திய புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஜோ பைடனின் பதவியேற்பு விழாவும் நாடாளுமன்ற கட்டிடத்தில் தான் நடைபெற உள்ளது. மேலும் ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் போதும் நாடாளுமன்றத்தில் ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நாடாளுமன்ற கட்டிடம் முழுவதுமே பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜோ பைடனின் பதவியேற்பு விழா நடக்கும் அரங்கம் அமைந்துள்ள நாடாளுமன்றத்தின் வடக்கு பகுதிக்குள் நுழைய கார் ஒன்று வந்தது. அப்போது அந்த காரை மறித்த பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது, ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்துள்ளதாகவும், அதற்கான அழைப்பிதழையும் அந்த நபர் வழங்கினார். அந்த அழைப்பிதழை ஆய்வு செய்த போலீசார், அந்த அழைப்பிதழ் போலியானது என கண்டுபிடித்தனர். பின்னர், அந்த காரை ஆய்வு செய்தனர். அப்போது அந்த காரில் தானியங்கி துப்பாக்கி மற்றும் 509 தோட்டாக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக, கார் ஓட்டி வந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் வெர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்த வெஸ்லி அலேன் பிலியர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த நபரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் போது, நாடாளுமன்ற கலவரத்தை போல நாடு முழுவதும் உள்ள 50 மாகாணங்களிலும் வன்முறை சம்பவங்களை நிகழ்த்த டிரம்ப் ஆதரவாளர்கள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இதனால் தலைநகர் வாஷிங்டன் உள்பட அனைத்து மாகாணங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாஷிங்டனில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் மூடப்பட்டுள்ளன. முக்கிய தெருக்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினரின் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜோ பைடனின் பதவியேற்பு விழாவையொட்டி தலைநகர் வாஷிங்டனில் ஏற்கனவே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கிக்கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 8:49:38 AM (IST)

மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும்; அமெரிக்கா எச்சரிக்கை
வியாழன் 25, பிப்ரவரி 2021 9:04:05 AM (IST)

அமெரிக்காவில் நடுவானில் விமானத்தில் தீவிபத்து: விமானியின் சாதுரியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்
திங்கள் 22, பிப்ரவரி 2021 9:03:54 AM (IST)

செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது நாசாவின் ரோவர் : அதிபர் ஜோ பைடன் வாழ்த்து
சனி 20, பிப்ரவரி 2021 9:02:02 AM (IST)

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு: 34 லட்சம் மக்கள் தவிப்பு
வியாழன் 18, பிப்ரவரி 2021 12:01:01 PM (IST)

மியான்மரில் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு: அமெரிக்கா, இங்கிலாந்து கண்டனம்
வியாழன் 18, பிப்ரவரி 2021 9:02:17 AM (IST)
