» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் 8 தமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை: கோத்தபய உத்தரவு

சனி 28, மார்ச் 2020 10:38:40 AM (IST)

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது ஈவிரக்கமின்றி 5 வயது குழந்தை உள்ளிட்ட 8 தமிழர்களை சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவ வீரர் சுனில் ரத்நாயகாவை விடுதலை செய்யுமாறு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். .

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது ஈவிரக்கமின்றி 5 வயது குழந்தை உள்ளிட்ட 8 தமிழர்களை சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 1983-ம் ஆண்டு தொடங்கி 2009-ம் ஆண்டு வரை உள்நாட்டுப்போர் நடந்தது. இந்தப்போரில் அப்பாவி தமிழ் மக்களும் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட பரிதாபம் நடந்தது. இந்த உள்நாட்டுப்போரின்போது, 2000-ம் ஆண்டு, டிசம்பர் 19-ந் தேதி யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 5 வயது குழந்தை உள்ளிட்ட தமிழர்களை சிங்கள ராணுவ வீரர் சுனில் ரத்நாயகா சுட்டுக்கொலை செய்தார். இது தொடர்பாக சுனில் ரத்நாயகா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை கொழும்பு உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. 

விசாரணை முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட நிலையில், மரண தண்டனை விதித்து 2015-ம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை இலங்கை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உறுதி செய்து உத்தரவிட்டது. அவர், கொழும்பு வெலிக்கடை சிறையில் மரண தண்டனை கைதியாக இருந்து வந்தார்.  இந்நிலையில், இலங்கையில் கரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், சுனில் ரத்நாயகாவை விடுதலை செய்யுமாறு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதுபற்றி அவரது ஊடக பிரிவு செய்திதொடர்பாளர் கூறும் போது, "சிறையில் இருந்து சுனில் ரத்நாயகாவை விடுதலை செய்யுமாறு நீதித்துறைக்கு அதிபர் அறிவுறுத்தி உள்ளார்” என்று குறிப்பிட்டார். இதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போரில், 8 தமிழர்களை கொன்று குவித்து போர்க்குற்றம் செய்த ஒருவரை அதிபர் கோத்தபய ராஜபக்சே மன்னித்து விடுதலை செய்திருப்பது, உலகமெங்கும் வாழ்கிற தமிழர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த செயலுக்கு இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இதையொட்டி டுவிட்டரில் அந்த அமைப்பு வெளியிட்ட பதிவில், "இத்தகைய தருணத்தில் சுனில் ரத்நாயகாவை அதிபர் கோத்தபய ராஜபக்சே விடுதலை செய்திருப்பது சந்தர்ப்பவாதம் ஆகும். இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்” என கூறி உள்ளார். இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு கருத்து தெரிவிக்கையில், "கொடுங்குற்றத்தில் ஈடுபட்டவர்களை கரோனா வைரஸ் பரவி வருவதை வாய்ப்பாக கருதி விடுதலை செய்திருப்பது கண்டனத்துக்கு உரியது. பாதிக்கப்பட்டோருக்கு (தமிழர்களுக்கு) நீதி கேட்கும் உரிமை உள்ளது. நீதி வழங்குகிற கடமை, இலங்கை அரசுக்கு உள்ளது” என கூறி உள்ளது.

சுனில் ரத்நாயகாவுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்தது குறித்து அந்த நாட்டின் நீதித்துறை மந்திரி நிமல் சிறிபாலா டி சில்வாவிடம் கருத்து கேட்டபோது அவர், "இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது. எதையும் ரத்து செய்யும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது. மன்னிப்பு அளிக்கிற அதிகாரமும் உள்ளது. இதை யாரும் கேள்வி கேட்க முடியாது” என குறிப்பிட்டார்.

அதே நேரம் யாழ்ப்பாணம் முன்னாள் எம்.பி. எம்.ஏ. சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில், "போரின்போது நடந்த கொடுங்குற்றங்களில் சம்மந்தப்பட்டவர்களை, இலங்கை அரசு ஒருபோதும் பொறுப்பேற்க செய்யாது. இதை, மிக அபூர்வமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு வழக்கில் குற்றவாளியை விடுதலை செய்திருப்பது காட்டுகிறது. இலங்கையின் அனைத்து அரசமைப்புகளும் கூட்டுச்சதி செய்து, குற்றவாளிகளையெல்லாம் வெளியே விட்டு விடுவார்கள்” என்று வேதனையுடன் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory