» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் 2 இந்து சிறுமிகள் கடத்தி கட்டாயத் திருமணம்: விசாரணை நடத்த இம்ரான் கான் உத்தரவு

ஞாயிறு 24, மார்ச் 2019 10:51:02 PM (IST)

பாகிஸ்தானில் 13 மற்றும் 15 வயதுடைய இந்து சிறுமிகளை கடத்தி கட்டாய திருமணம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்துமாறு பிரதமர் இம்ரான் கான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களான இந்துக்கள் சுமார் ஒரு கோடி பேர் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்கு உட்பட்ட கோட்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த ஹோலி கொண்டாட்டத்தின்போது அப்பகுதியில் மிகவும் செல்வாக்கு படைத்த முக்கிய பிரமுகர்கள் 13 மற்றும் 15 வயதுடைய இரு இந்து சிறுமிகளை கடத்திச்சென்றனர்.

கடத்திச்செல்லப்பட்ட அந்த சிறுமிகளை ஒரு முஸ்லிம் மதத்தலைவர் கட்டாய மதமாற்றம் செய்து இரு நபர்களுக்கு திருமணம் செய்துவைத்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின. இவ்விவகாரத்தால் கொதிப்படைந்த இந்து மக்கள், அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை அவர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த சிறுமிகளை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தானில் உள்ள இந்திய தலைமை தூதருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டார்.

இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அவ்விரு சிறுமிகளையும் உடனடியாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிந்து மாகாண அரசுக்கு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி இன்று தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடக்காமல் இருப்பதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசு தீவிரம் காட்ட வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Black Forest Cakes
New Shape Tailors

Nalam Pasumaiyagam

Anbu Communications

Joseph Marketing
Thoothukudi Business Directory