» செய்திகள் - விளையாட்டு » உலகம்

குர்து போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால் துருக்கி பேரழிவை சந்திக்க நேரிடும் : டிரம்ப் எச்சரிக்கை

செவ்வாய் 15, ஜனவரி 2019 9:07:20 AM (IST)

குர்து போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால் பேரழிவை சந்திக்க நேரிடும் என்று துருக்கிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2011–ம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது. அந்த சூழலை பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு சிரியாவில் காலூன்றியது. அவர்கள் அரசு படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி நாட்டின் பெரும்பாலான நகரங்களை கைப்பற்றினர். இதையடுத்து, சிரியாவை சேர்ந்த குர்து இன போராளிகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் இறங்கினர். அவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்க படைகள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2015–ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஒபாமா உத்தரவின்பேரில் 2,000 அமெரிக்க வீரர்கள் சிரியா சென்றனர்.

அவர்கள் குர்து இன போராளிகளுடன் இணைந்து, ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி, பல நகரங்களை அவர்களிடம் இருந்து மீட்டனர். இப்படி குர்து இன போராளிகளுக்கு அமெரிக்க வீரர்கள் பக்கபலமாக இருந்து வந்தனர். இந்தநிலையில், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும், எனவே அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த மாத இறுதியில் அதிரடியாக அறிவித்தார். இது குர்து இன போராளிகளுக்கு பேரிடியாக அமைந்தது. மேலும் குர்து இன போராளிகள் மீது துருக்கி தாக்குதல் நடத்துவதற்கான சூழல் உருவானது.

அமெரிக்க படைகளை வாபஸ் பெறும் முடிவு, ‘‘ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, ஐ.எஸ். அமைப்பு மீண்டும் உயிர்த்தெழ வழிவகுக்கும்’’ என்று குர்து போராளிகள் தலைமையிலான ஐ.எஸ். எதிர்ப்பு கூட்டணி எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், ‘‘சிரியாவில் குர்து இன போராளிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படாது’’ என அறிவித்தார்.

ஆனால் சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் தொடங்கிவிட்டதாகவும், அமெரிக்க வீரர்கள் ராணுவ தளவாடங்களுடன் சிரியாவில் இருந்து வெளியேறி வருவதாகவும் அமெரிக்க தலைமையிலான கூட்டுபடைகளின் செய்தி தொடர்பாளர் கடந்த 11–ந்தேதி தெரிவித்தார். இது குர்து இன போராளிகளை மீண்டும் கலக்கமடைய செய்துள்ளது. இந்த நிலையில் சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்ட பின்னர் குர்து இன போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார ரீதியில் துருக்கி பேரழிவை சந்திக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். அதே சமயம் துருக்கியை எரிச்சலூட்டக்கூடாது என குர்து இன போராளிகளை அவர் வலியுறுத்தி இருக்கிறார். 

இது குறித்து டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியதாவது: சிரியாவில் குர்து இன போராளிகள் மீது துருக்கி தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அந்நாடு பொருளாதார பேரழிவை சந்திக்க நேரிடும். குர்து இன போராளிகளை நெருங்காமல் பல மைல்களுக்கு அப்பால் இருப்பதே துருக்கிக்கு பாதுகாப்பாக இருக்கும். அதே போல் குர்து இன போராளிகளும் துருக்கியை எரிச்சலடைய செய்யாமல் விலகி இருக்க வேண்டும். சிரியாவில் இன்னும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் நிலையில் அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவது கடினமாகத்தான் இருக்கிறது.  ஒருவேளை ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீண்டும் தலைத்தூக்கினால் அமெரிக்க படைகள் அவர்களை அழிக்க தவறாது.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்த நிலையில் டிரம்புக்கு பதில் அளிக்கும் விதமாக துருக்கி அதிபர் தயீப் எர்டோகனின் செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் காலின் தனது டுவிட்டரில் ‘‘சிரிய குர்து மக்களையும், குர்து இன தீவிரவாதிகளையும் சமமாக ஒப்பிட்டு டிரம்ப் மிகப்பெரிய தவறிழைத்து வருகிறார். நாங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராகதான் போராடுகிறோம். குர்து இன மக்களுக்கு எதிராக இல்லை’’ என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

CSC Computer Education

Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory