» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வடகொரியா மீது ஐ.நா. புதிய பொருளாதார தடை : ரூ.7,800 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்

புதன் 13, செப்டம்பர் 2017 9:02:28 AM (IST)

வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகள் விதித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில், வடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு முதல் அணுகுண்டுகளை வெடித்து சோதித்து வருகிறது. தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. கடந்த 3–ந் தேதி வடகொரியா, 6–வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. இது சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையாக அமைந்தது. இதன் காரணமாக அந்த நாட்டுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஒரே குரலில் வலியுறுத்தின.

வடகொரியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒட்டுமொத்த தடை விதிக்க வேண்டும், பிற நாடுகளுக்கு வடகொரியா ஜவுளி ஏற்றுமதி செய்ய தடை விதிக்க வேண்டும், வடகொரிய தொழிலாளர்களை பணி நியமனம் செய்ய உலகளாவிய தடை விதிக்க வேண்டும், வடகொரியாவின் தலைவர் கிம்ஜாங் அன்னின் சொத்துகளை முடக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு பொருளாதார தடைகளுக்கு வழிவகுக்கும் வரைவு தீர்மானத்தை அமெரிக்கா இயற்றி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளுக்கு சுழற்சியில் விட்டது.

இந்த தீர்மானத்தின் குறிப்பிட்ட சில அம்சங்களுக்கு எதிராக வட கொரியா ஆதரவு நாடுகளான சீனாவும், ரஷியாவும் போர்க்கொடி உயர்த்தின.  இதையடுத்து அவ்விருநாடுகளும் எதிர்ப்பு தெரிவிக்கும் அம்சங்களை தீர்மானத்தில் இருந்து நீக்குவதற்கு அமெரிக்கா இறங்கிவந்தது. அதைத் தொடர்ந்து வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பதற்கான தீர்மானம் திருத்தப்பட்டு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இதில் 15 உறுப்பு நாடுகளும், தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. எதிர்த்து எந்தவொரு நாடும் வாக்களிக்கவில்லை. 

புதிய பொருளாதார தடைகள் வருமாறு:–

* வடகொரியாவுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்கள் ஏற்றுமதி செய்வது மட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் அந்த நாட்டின் அணுசக்தி திட்டங்களை நிறைவேற்ற எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

* வட கொரியாவில் இருந்து ஜவுளி ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படும். ஜவுளிதான் வடகொரியாவில் இருந்து மிக அதிகளவில் ஏற்றுமதி செய்து, வருவாய் ஈட்டித்தரக்கூடிய இரண்டாவது பொருள். இந்த தடை காரணமாக அந்த நாட்டுக்கு ஆண்டுக்கு 700 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4 ஆயிரத்து 550 கோடி) இழப்பு ஏற்படும்.

* வெளிநாடுகளில் உள்ள வடகொரிய தொழிலாளர்களுக்கு புதிய விசாக்கள் வழங்கப்பட மாட்டாது. இதன் காரணமாக வடகொரியாவுக்கு ஆண்டுக்கு 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3 ஆயிரத்து 250 கோடி) வரி வருவாய் இழப்பு ஏற்படும்.

அமெரிக்கா கருத்து

இந்த தடைகள் பற்றி ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கருத்து தெரிவிக்கையில், ‘‘வடகொரியா மீது புதிய தடைகள் விதிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. நாங்கள் போரை விரும்பவில்லை’’ என்று கூறினார். தென்கொரிய அதிபரின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், ‘‘உலக அமைதிக்கு எதிரான வடகொரியாவின் பொறுப்பற்ற சவால்கள், அவர்களுக்கு எதிராக இன்னும் வலுவான பொருளாதார தடைகளை விதிக்க வைக்கும் என்பதை அந்த நாடு உணர வேண்டும்’’ என்று கூறினார்.

வடகொரியா கடும்  கோபம்

ஆனால் ஐ.நா. சபை விதித்துள்ள புதிய பொருளாதார தடைகள், வடகொரியாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளன. இதுபற்றி அந்த நாட்டின் அரசு ஊடகம், ‘‘வடகொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க அழுத்தம் தந்ததால், அதற்கான விலையை அந்த நாடு கொடுக்க வேண்டியது வரும் என்பதை உறுதி செய்கிறோம்’’ என எச்சரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory