» செய்திகள் - விளையாட்டு » உலகம்

200 கிமீ வேகத்தில் புளோரிடாவை புரட்டிப் போட்ட இர்மா புயல்: பீதியில் உறைந்திருக்கும் 6 கோடி மக்கள்

திங்கள் 11, செப்டம்பர் 2017 10:24:18 AM (IST)மணிக்கு 200 கிமீ வேகத்தில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தையும் புரட்டிப் போட்டது இர்மா புயல். சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டுவதால், 6 கோடி மக்களும் பீதியில் உறைந்துள்ளனர். 

அட்லாண்டிக் கடலில் உருவான ‘இர்மா’ புயல் உலகிலேயே 2வது அதி பயங்கர புயலாகும். கடந்த 2 நாட்களாக கரீபியன் தீவுகள், கியூபாவை சூறையாடிய இர்மா, வேகமாக நகர்ந்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நெருங்கியது. இர்மா புயலையொட்டி, கடந்த ஒரு வாரமாக புளோரிடா மாகாணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாகாணம் முழுவதற்கும் புயல் அபாயம் இருப்பதால், ஒட்டு மொத்த மக்களும் குடியிருப்புகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

‘இந்த புயலில் வெளியில் வருவது  தற்கொலைக்கு சமமானது. புயலில் இருந்து யாரும் உயிர் தப்ப முடியாது. எனவே  பாதுகாப்பாக இருங்கள்’ என புளோரிடா மாகாண ஆளுநர் ரிக் எச்சரிக்கை  விடுத்தார்.  பள்ளி, சர்ச், விளையாட்டு உள்அரங்கங்கள் என 400க்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டன. தேசிய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் முகாம்களில் பெரும்பாலான மக்கள் தஞ்சமடையத் தொடங்கினர். நேற்று முன்தினம் இரவு 3ம் பிரிவு புயலாக வலுவிழந்த இர்மா, புளோரிடாவை நெருங்கிய நிலையில் நேற்று காலை மீண்டும் 4ம் பிரிவு புயலாக வலுவடைந்தது. 

இந்நிலையில், புளோரிடாவின் தாழ்வான பகுதியான கீஸ் தீவை நேற்று காலை 7 மணிக்கு புயல் தாக்கத் தொடங்கியது. புயல் நகர நகர மணிக்கு 200 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டியது. 15 முதல் 20 அடி உயரத்திற்கு கடல் அலைகள் ஆர்ப்பரித்தன. கனமழை காரணமாக, கீஸ் தீவுக்கூட்டத்தின் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. காலை 9 மணிக்கு கீஸ் தீவை புயல் முழுமையாக மையம் கொண்டது. சூறாவளியில் சிக்கி மரங்கள் வேரோடு சரிந்தன. புயலின் போது சாலையில் சென்ற கார், டிரக் தூக்கி வீசப்பட்டதில் 3 பேர் இறந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. புயல் வலுவடைந்ததைத் தொடர்ந்து  மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.  

மியாமியில் அதிகபட்சமான பகுதிகளில் மக்கள் இருளில் தவிக்கின்றனர். மியாமி  நகரின் பெரும்பாலான சாலைகளில் மரங்கள் சரிந்து காடு போல் காட்சி அளிக்கிறது. மாகாணத்தின் முக்கிய நகரங்களை நோக்கி புயல் வேகமாக நகர்வதாக தேசிய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. திங்கட்கிழமை அதிகாலை தாம்பா நகரை புயல் தாக்கும் என தேசிய புயல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயலையொட்டி, மாகாணத்தின் அனைத்து நகரங்களிலும் திங்கட்கிழமை வரை அரசு அலுவலகங்கள், பள்ளிகள், நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மியாமியை கடக்கும் இர்மா புயல் படிப்படியாக வலுவிழந்து நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், புளோரிடாவின் 6 கோடி மக்களும் பீதியுடன் உள்ளனர். செயின்ட் மார்டின் தீவில் 60 இந்தியர்கள் மீட்பு: அட்லாண்டிக் கடலில் உருவான இர்மா புயல் கடந்த வாரம் கரீபியன் தீவுகளை புரட்டிப் போட்டது. சுற்றுலா தீவான செயின்ட் மார்டின் தீவும் கடுமையாக பாதித்தது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் சூறாவளியில் சிக்கி தவித்தனர். இங்கு சிக்கிய பெரும்பாலான இந்தியர்கள் தற்காலிக விசாவில் சுற்றுலா வந்திருந்தனர். அவர்களை இந்திய தூதரகம் பாதுகாப்பாக மீட்டு, அமெரிக்கா அனுப்பி வைத்தது. அங்கிருந்து அவர்கள் நாடு திரும்ப உள்ளனர்.  மேலும், இந்த தீவில் சிக்கிய 1200 அமெரிக்கர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 

மேலும் 5 ஆயிரம் அமெரிக்கர்கள் இங்கு சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தயார் நிலையில் இந்திய தூதரகம்: அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் சந்தோஷ் ஜா கூறுகையில், ‘‘கடந்த 48 மணி நேரமாக தெற்கு அமெரிக்கா மற்றும் மேற்கு அட்லாண்டிக் தீவுகளின் அனைத்து பகுதிகளில் உள்ள இந்தியர்களுடன் தொடர்பில் உள்ளோம். அவர்கள் மிக கடினமான சூழ்நிலையில் இருப்பதை உணர்ந்துள்ளோம். கடந்த மாதம் ஹார்வி புயலை எதிர் கொண்டோம். இப்போது இர்மாவை சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். முழு தூதரகமும் இதற்காக பணியாற்றி வருகிறது” என்றார்.


மக்கள் கருத்து

ஒருவன்Sep 14, 2017 - 06:00:37 PM | Posted IP 59.96*****

அது ஒரு தீவு பகுதி அடிக்கடி புயல் தாக்கும் இடம், கல்வி அறிவுள்ள நாட்டில் கொஞ்சநாள்ல சீக்கிரம் சரி பண்ணிடுவாங்க , ஆனால் இந்தியாவிலேயோ அரசியல்வாதிகள் அதை வச்சி ஆட்சி தான் பண்ணுவாங்க , ஒட்டு பிச்சை எடுப்பாங்க, பிச்சை எடுத்து கொள்ளை அடித்த பணத்தை வைத்து , ஒட்டு போட்டால்தான் சரி பண்ணுவாங்க ..

உண்மைSep 13, 2017 - 02:02:52 PM | Posted IP 122.1*****

என்னமோ பேரிக்கா பெரிய இவன்-னு சொன்னாங்க? இப்படி சீரழியுறான்! என்னடா இது மூடர்களுக்கு வந்த சோதனை!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
crescentopticals
Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory