» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமரின் தீபாவளி பரிசு மக்களை முழுமையாக சென்றடைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்

சனி 18, அக்டோபர் 2025 5:44:44 PM (IST)

ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன், பிரதமரின் தீபாவளி பரிசாக மக்களை முழுமையாக சென்றடைந்துள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. கலால் வரி, வாட், சேவை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஜி.எஸ்.டி. என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டன.

இந்த ஜி.எஸ்.டி. 4 அடுக்குகளை கொண்டிருந்தது. அதன்படி 5%, 12%, 18% மற்றும் 28% என 4 வகையான வரி விகிதத்தின் கீழ் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த ஜி.எஸ்.டி. விகிதங்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இதனையடுத்து, வெறும் 5% மற்றும் 18% அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வகையில் வரி விகிதம் மாற்றப்பட்டுள்ளது. அதேநேரம் சிகரெட் மற்றும் புகையிலை, பான் மசாலா போன்ற பாவப்பொருட்கள் மற்றும் சொகுசு கார் போன்ற உயர் ரக ஆடம்பர பொருட்கள், குளிர் பானங்கள் ஆகியவற்றுக்காக 40 சதவீத சிறப்பு வரி அடுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டி. குறைப்பு கடந்த மாதம் 22-ந் தேதி அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் குறித்து டெல்லியில் இன்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் ஆகியோர் கூட்டாக இணைந்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், "ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் உள்நாட்டு கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. 8 நாட்களில் 1.65 லட்சம் மாருதி கார்கள் விற்பனை ஆகியுள்ளது. மகேந்திரா கார் விற்பனை 50% அதிகரித்துள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாடா கார்கள் விற்பனையாகியுள்ளன” என்று தெரிவித்தார். மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் பேசுகையில், "ஜி.எஸ்.டி. குறைப்பால் உணவு பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனை புதிய சாதனை படைத்துள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் கிடைத்துள்ளது. கார், ஏ.சி., வாஷிங் மெஷின், டி.வி. உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. பண்டிகை காலத்தில் பைக்குகள், டிராக்டர்கள் விற்பனை வேகமாக உயர்ந்துள்ளது.

பிரதமரின் தீபாவளி பரிசு மக்களை முழுமையாக சென்றடைந்துள்ளது. உள்நாட்டு பொருட்களுக்கு மக்கள் முன்னுரிமை அளித்துள்ளனர். தற்சார்பு இந்தியாவின் வளர்ச்சிக்கு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது” என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து

you youOct 19, 2025 - 11:33:33 AM | Posted IP 172.7*****

like 150000 already deposited in our bank account

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory