» செய்திகள் » இந்தியா

Share

வலுவடைகிறது லாலு-முலாயம்-மம்தா புதிய கூட்டனி: காங். கூட்டனி அரசுக்கு தலைவலி?

புதன் 10, மார்ச் 2010 10:20:08 AM (IST)

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினப் பெண்களுக்கு உள் இட ஒதுக்கீடு இல்லாமல் மகளிர் மசோதாவை நிறைவேற்றியதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் லாலு, முலாயம் ஆகியோர் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை இன்று நேரில் சந்தித்து ஆதரவு வாபஸ் கடிதத்தை அளி்க்கவுள்ளார் லாலு.

இதுகுறித்து லாலு நிருபர்களிடம் கூறுகையில், ராஜ்யசபாவில் எம்.பிக்களை மார்ஷல்களைக் கொண்டு வெளியேற்றியது இதுவரை நிகழ்ந்திராத செயலாகும். நாட்டில் சர்வாதிகாரத்தையும், எமர்ஜென்சியையும் கொண்டு வருவதற்கான துவக்கம் இது. ராஜ்யசபாவையே போலீஸ் நிலையமாக மாற்றிவிட்டனர் என்றார்.

இந்நிலையில் ராஜ்யசபாவில் இருந்து சமாஜவாதி கட்சியின் 4 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அக் கட்சியின் எம்.பிக்கள் கூட்டமும் இன்று நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு வெளியிலிருந்து அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதா, இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

இதற்கிடையே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என்று பாஜகவிடம் லாலுவும் முலாயமும் கூறியுள்ளனர். ஆனால், இதை ஏற்க பாஜக மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இப்போதைய நிலையில் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றால் மக்களிடையே பெரும் கெட்ட பெயர் ஏற்படும் என பாஜக கருதுவதாகத் தெரிகிறது. மேலும் இந்த தீர்மானத்தால் லாலு, முலாயமுக்கே அதிக அரசியல் லாபம் கிடைக்கும் என்றும், தனக்கு கெட்ட பெயர் மட்டுமே மிஞ்சும் என்றும் பாஜக நினைக்கிறது.

அதே சமயம் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சிவசேனா, அஜீத் சி்ங்கின் ராஷ்ட்ரீய லோக் தள் உள்ளிட்ட கட்சிகளுடன் இரு யாதவ்களும் பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர குறைந்தது 50 எம்பி்க்களின் ஆதரவு வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நேற்று காலை முலாயம் சிங்கையும், லாலு பிரசாத் யாதவையும் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார்.

உள் ஒதுக்கீடு இல்லாமல் மகளிர் மசோதா தாக்கலாவதை எதிர்த்த இந்த 3 தலைவர்களின் சந்தி்ப்புக்குப் பிறகே மாலையில் நடந்த ஓட்டெடுப்பை திரிணமூல் காங்கிரஸ் புறக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது இந்த புதிய கூட்டணி வலுவடைந்தால் அது காங்கிரஸ் அரசுக்கு பெரும் ஆபத்தில் போய் முடியவும் வாய்ப்புள்ளது.

ஆனால், அடுத்தாண்டு வரும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் தங்களது கூட்டணி மம்தாவுக்கு மிகவும் அவசியம் என்பதால் திரிணமூல் தங்களுக்கு எதிரான எந்த வேலையிலும் இறங்காது என்று காங்கிரஸ் கருதுகிறது.


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads