» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெண் டாக்டர்கள் இரவில் பணி செய்யக் கூடாது என கூற முடியாது: உச்சநீதிமன்றம்

செவ்வாய் 17, செப்டம்பர் 2024 4:32:54 PM (IST)

பெண் டாக்டர்களை இரவில் பணி செய்ய வேண்டாம் என்று கூற முடியாது என்று கொல்கத்தா வன்கொடுமை வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்  தெரிவித்துள்ளது.

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த மாதம் 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று சி.பி.ஐ. அறிக்கையை ஆய்வு செய்தது. விசாரணை தொடங்கியதும், மேற்கு வங்காள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இந்த வழக்கின் நேரடி ஒளிபரப்பை நிறுத்தக் கோரினார். மேலும் நேரலையால் பெண் வழக்கறிஞர்கள் ஆசிட் வீச்சு மற்றும் பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார். 

அப்போது நீதிபதிகள், "பயிற்சி டாக்டர் கொலை தொடர்பான விசாரணை நேரலையை ஒளிபரப்பு செய்வதை நிறுத்த முடியாது என்றும் இது பொது நலம் சார்ந்த விஷயம் என்றும் நீதிமன்ற அறையில் என்ன நடக்கிறது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றும் கூறினர். மேலும் வழக்கறிஞர்கள் மற்றும் பிறருக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் இருந்தால் நடவடிக்கை எடுப்பதாக சிபலுக்கு நீதிபதிகள் உறுதியளித்தனர்

தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையின்போது, "பெண்கள் சலுகைகளை எதிர்நோக்கவில்லை, சம வாய்ப்புகளையே எதிர்நோக்கியுள்ளனர். அனைத்து சூழல்களிலும் பணிபுரியவே பெண் டாக்டர்கள் விரும்புகின்றனர். இரவுப் பணியை செய்வதை தவிர்க்குமாறு பெண் டாக்டர்களுக்கு மேற்கு வங்காள அரசு உத்தரவிட முடியாது. பாதுகாப்பை கருதி இரவுப் பணியை தவிர்க்குமாறு அறிவித்த மேற்கு வங்காள அரசின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது வாதிட்ட கபில் சிபல், இந்த உத்தரவு தற்காலிகமானது என்றும், பெண் டாக்டர்கள் பணிநேரம் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக விரைவில் புதிய அறிவிப்பை மாநில அரசு வெளியிடும் என்றும் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory