» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஹோட்டல் நிறுவனர் மன்னிப்பு கேட்ட விவகாரம்: ராகுல் கண்டனம்!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 3:58:03 PM (IST)
ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஜிஎஸ்டி குறித்து அன்னபூர்ணா உணவகங்களின் நிறுவனர் சீனிவாசன் பேசுகையில், 'இனிப்புக்கு குறைவான ஜிஎஸ்டியும், காரத்துக்கு அதிகமான ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், பில் போடுவதில் சிரமம் உண்டாகிறது. பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை, ஆனால், அதில் வைக்கும் க்ரீமுக்கு ஜிஎஸ்டி போடப்படுகிறது' என்று பேசினார். இந்த விடியோ இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து, நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்கும் விடியோ நேற்றிரவு பாரதிய ஜனதா கட்சியினரால் ஊடகங்களில் பகிரப்பட இன்று வைரலாகி வருகின்றது.
இந்த விடியோவில், நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்த சீனிவாசன், "நான் எந்த கட்சியைச் சார்ந்தவனும் அல்ல. வருந்தும்படி, பேசியதற்கு மன்னித்து விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், கோயம்புத்தூரில் உள்ள அன்னபூர்ணா உணவகம் போன்ற ஒரு சிறு வணிக உரிமையாளர், அரசாங்கத்திடம் ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்கும்போது, அவரது கோரிக்கை ஆணவத்துடனும் அவமரியாதையுடனும் எதிர்கொள்ளப்படுகிறது. ஒரு கோடீஸ்வர நண்பர், விதிகளை சரிசெய்ய, சட்டங்களை மாற்ற அல்லது பொதுச் சொத்துக்களைப் பெற முற்படும்போது, மோடி சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்.
ஆனால் பணமதிப்பிழப்பு, வங்கிகளை அணுக முடியாமை, வரி பறிப்பு, பேரழிவு தரும் ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றின் தாக்கங்களை நமது சிறு வணிக உரிமையாளர்கள் ஏற்கனவே சகித்துக் கொண்டிருக்கிறார்கள். இறுதியாக அவர்கள் இப்போது அவமானப்படுத்தப்படுகிறார்கள்.
ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்களின் பலவீனமான அகங்காரம் (ஈகோ) புண்படுத்தப்படும்போது அவர்கள் எதிர் தரப்பினரை அவமானப்படுத்துவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பல ஆண்டுகளாக நிவாரணம் கேட்டு வருகின்றனர். இந்த திமிர்பிடித்த அரசாங்கம், மக்கள் சொல்வதைக் கேட்டால், ஒரே வரி விகிதத்திலான எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியால் லட்சக்கணக்கான வணிகர்களின் பிரச்னை தீர்க்கப்படும் என்பதை புரிந்து கொள்வார்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி கண்டனம்
காங்கிரஸ் கட்சி சார்பிலும் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனரை மன்னிப்பு கேட்க வைத்தது அதிகார ஆணவத்தின் உச்சம். மோடியின் நண்பர்களுக்கு வரி குறைப்பு, ஏழை, நடுத்தர மக்களுக்கு வரி அதிகமாக உள்ளது. அத்தியாவசிய பொருள்களுக்கு ஒரேமாதிரியான எளிமையான ஜிஎஸ்டி வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது' என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
இதனிடையே, அன்னபூர்ணா நிறுவனர் மன்னிப்பு கேட்ட விடியோவை பாஜகவினர் வெளியிட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டுள்ளார்.
கந்தசாமிSep 14, 2024 - 07:11:45 PM | Posted IP 172.7*****